This Article is From Mar 05, 2019

‘தேமுதிக கூட்டணிக்கு வந்தால்…’- முதல்முறையாக கருத்து தெரிவித்த அன்புமணி

அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இணையுமா இணையாதா என்பது குறித்து தொடர்ந்து குழப்பம் நிலவி வருகிறது.

‘தேமுதிக கூட்டணிக்கு வந்தால்…’- முதல்முறையாக கருத்து தெரிவித்த அன்புமணி

அதிமுக கூட்டணியில் முதன் முதலாக சேர்ந்த கட்சி பாமக

ஹைலைட்ஸ்

  • தேமுதிக, அதிமுக கூட்டணியில் இணையவே அதிக வாய்ப்புள்ளது
  • நேற்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், விஜயகாந்தை நேரில் சந்தித்தார்
  • திமுக தரப்பிலும் தேமுதிக-வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது

அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இணையுமா இணையாதா என்பது குறித்து தொடர்ந்து குழப்பம் நிலவி வருகிறது. தொகுதி ஒதுக்கீடு குறித்து இரு கட்சிகளுக்கும் இடையில் சுமூக முடிவு எட்டப்படாததால், கூட்டணி உறுதி செய்யப்படாத நிலையில் இருக்கிறது. அதே நேரத்தில் அதிமுக கூட்டணியில் முதன் முதலாக சேர்ந்த கட்சி பாமக. அந்தக் கட்சி, தேமுதிக-வின் வருகை குறித்து இதுவரை எதுவும் பேசாமல் தவிர்த்து வந்தது. ஆனால், தற்போது பாமக-வின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், தேமுதிக- அதிமுக கூட்டணி குறித்து பேசியுள்ளார். 

கடந்த இரண்டு வாரங்களாக அதிமுக-வின் மூத்த நிர்வாகிகள், தேமுதிக தலைவர் விஜயகாந்திடம் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதிமுக கூட்டணியில் முதலில் இணைந்த பாமக-வுக்கு 7 நாடாளுமன்றத் தொகுதி மற்றும் ஒரு ராஜ்யசபா எம்.பி பதவி தரப்படும் என்று உடன்படிக்கை கையெழுத்தானது. இதை முன் வைத்து தேமுதிக தரப்பு, ‘எங்களுக்கும் ராஜ்யசபா எம்.பி சீட் கொடுக்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்தது. இதில் அதிமுக-வுக்கு உடன்பாடு இல்லை என்பதால், கூட்டணி பேச்சுவார்த்தை ஒரு முடிவுக்கு வரவில்லை. 

இதற்கிடையில் திமுக தரப்பும், தேமுதிக-வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. உச்சகட்டமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், விஜயகாந்தை அவரது இல்லத்துக்கே சென்று சந்தித்தார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில், ‘தேமுதிக உங்கள் கூட்டணிக்கு வந்தால் வரவேற்பீர்களா?' என்று கேட்கப்படதற்கு ஸ்டாலின், ‘உங்கள் நல்ல எண்ணத்துக்கு நன்றி' என்று சூசகமான பதிலை கூறிவிட்டு கிளம்பினார். 

இந்த சம்பவம் நடந்து ஒரு வார காலம் கடந்துவிட்ட நிலையில், திமுக கூட்டணியில், விசிக, சிபிஐ, சிபிஎம், ஐஜேகே, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு முடிக்கப்பட்டு விட்டது. இதனால், தேமுதிக-வை கூட்டணியில் இனி சேர்த்துக் கொள்ள முடியாத சூழலில் திமுக வந்துவிட்டது. இதனால் தேமுதிக, எப்படியும் அதிமுக-வுடன்தான் அணி சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இன்று தேமுதிக சார்பில், கட்சியின் முக்கிய நிர்வாகிகள், கூட்டணி குறித்து முடிவெடுக்க ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் ஓரிரு நாளில் எந்த அணியில் தேமுதிக இருக்கும் என்பது உறுதியாகிவிடும். இப்படிப்பட்ட சூழலில் அன்புமணி ராமதாஸ், ‘எங்கள் கூட்டணி மிகவும் பலம் பொருந்திய கூட்டணி. மெகா கூட்டணி. எங்களைப் பார்த்து திமுக தரப்புக்கு அச்சம் ஏற்பட்டுவிட்டது. அதனால்தான் எங்களை குறித்து அவதூறு பரப்பி வருகின்றனர். தேமுதிக-வும் எங்களுடன் இணைந்தால் மிகவும் மகிழ்ச்சியடைவோம். எங்கள் கூட்டணிக்கு இன்னும் பலம் சேரும்' என்று கருத்து தெரிவித்துள்ளார். 

2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலின்போதும், பாஜக தலைமையில் அமைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக மற்றும் தேமுதிக கட்சிகள் இடம் பெற்றிருந்தன. அப்போது முதல் இப்போது வரை, பாமக-வும் தேமுதிக-வும் அரசியல் எதிரிகளாகத்தான் இருந்து வருகின்றனர்.  


 

.