This Article is From May 02, 2020

2வது முறையாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு: நாடு முழுவதும் இவற்றுக்கு மட்டும் அனுமதி மறுப்பு!

தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, மே 17 ஆம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு அமலில் இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

2வது முறையாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு: நாடு முழுவதும் இவற்றுக்கு மட்டும் அனுமதி மறுப்பு!

கொரோனா பாதிப்பைப் பொறுத்து நாட்டில் உள்ள மாவட்டங்கள் 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் 2வது முறையாக இந்திய அளவில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளது மத்திய அரசு. இது குறித்து அறிவிப்பை வெளியிட்ட மத்திய உள்துறை அமைச்சகம், “ஊரடங்கு உத்தரவால் கோவிட்-19 எனப்படும் கொரோனா பரவலைத் தடுப்பதில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளோம்,” எனக் கூறியுள்ளது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, மே 17 ஆம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு அமலில் இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கொரோனா பாதிப்பைப் பொறுத்து நாட்டில் உள்ள மாவட்டங்கள் 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸின் தாக்கத்திற்கு ஏற்றாற் போல அமலில் உள்ள ஊரடங்கில் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ள பகுதிகள்:

சிவப்பு மண்டலம்: மிகவும் அதிக அளவில் கொரோனா பாதிப்பு இருக்குமிடம்.

கன்டெயின்மென்ட் மண்டலம்: சிவப்பு மண்டலத்திலேயே மிகவும் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ள பகுதி

ஆரஞ்சு மண்டலம்: கொரோனா வைரஸால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ள பகுதி

பச்சை மண்டலம்: கடந்த 21 நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்படாத பகுதி

நாடு முழுவதும் எந்தெந்த நடவடிக்கைகளுக்கு அனுமதி கிடையாது:

-விமானங்கள் மற்றும் ரயில்கள் மூலம் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு சாலை வழியாக செல்ல அனுமதி கிடையாது. அதே நேரத்தில் அரசின் அனுமதி பெற்று சாலை மார்க்கமாகவோ, ரயில் அல்லது விமானம் மூலமாகவோ பயணம் செய்ய அனுமதியுண்டு.

-பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடியே இருக்கும். அதேபோல மால்கள், உணவகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், முடி திருத்தும் கடைகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் எந்த இடங்களுக்கும் திறக்க அனுமதி கிடையாது. 

-மத மற்றும் அரசியல் சார்ந்த கூட்டங்களுக்கு அனுமதி கிடையாது.

-இரவு 7 மணியிலிருந்து காலை 7 மணி வரை பயணம் செய்ய யாருக்கும் அனுமதி கிடையாது. இந்த உத்தரவை அமல்படுத்த சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், 144 தடைச் சட்டத்திற்குக் கீழ் உத்தரவு பிறப்பிக்கலாம் என பரிந்துரை செய்துள்ளது அரசு. 

-65 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் அனைத்து நேரங்களிலும் வீட்டிலேயே இருக்க வேண்டும். அதேபோல, நோயால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள், கர்ப்பமான பெண்கள் மற்றும் 10 வயதுக்குக் கீழுள்ள குழந்தைகள் அனைத்து நேரங்களிலும் வீட்டிலேயே இருக்க வேண்டும். அத்தியாவசிய மற்றும் உடல்நலன் சார்ந்த விஷயங்களுக்காக மட்டுமே அவர்கள் வெளியில் வர அனுமதியுண்டு.
 

.