11, 12-ம் வகுப்பு தேர்வை நடத்தி என்ன சாதிக்கப்போகிறீர்கள்? அன்புமணி ராமதாஸ்
ஹைலைட்ஸ்
- 11,12-ம் வகுப்பு தேர்வை நடத்தி என்ன சாதிக்கப்போகிறீர்கள்?
- 11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மொத்தம் 20 லட்சம் பேர் எழுதுகின்றனர்
- இது கொரோனா பரவுவதற்கே வழி வகுக்கும்.
11,12-ம் வகுப்பு தேர்வை நடத்தி என்ன சாதிக்கப்போகிறீர்கள் என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின் பரவலை தடுக்கும் வகையில், அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. ரயில் சேவைகள், மெட்ரோ ரயில் சேவைகள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகள் உள்ளிட்டவை நிறுத்தப்பட்டுள்ளன. பெரும்பாலான மாநிலங்களில், மார்க்கெட்டுகள், மால்கள், திரையரங்குகள், உடற்பயிற்சி மையங்கள் உள்ளிட்டவைகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளன.
இந்தியாவில் 400க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 80 மாவட்டங்கள் முடக்கப்படுவதாக மத்திய அரசு நேற்றைய தினம் உத்தரவிட்டிருந்தது. அதிகபட்சமாக கேரளா மற்றும் மகாராஷ்ட்டிராவில் 10 மாவட்டங்களை தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு உள்ளிட்ட 3 மாவட்டங்களை தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, நாளை மாலை முதல் 31ம் தேதி வரை மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக அரசு 11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு கட்டாயம் ரத்து செய்யப்பாடது என உறுதியாக உள்ளது. இதுகுறித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது,
11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியும் திட்டமிட்டபடி அத்தேர்வுகள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருக்கிறது. இதன்மூலம் பள்ளிக்கல்வித்துறை எதை சாதிக்கப்போகிறது என்பது தான் தெரியவில்லை.
11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மொத்தம் 20 லட்சம் பேர் எழுதுகின்றனர். அவர்களுக்கு துணையாக வரும் பெற்றோர், தேர்வுப்பணிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியாளர் என இந்தத் தேர்வுகள் நடைபெறும் மையங்களில் மட்டும் சுமார் 50 லட்சம் பேர் கூடுவார்கள்.
இது கொரோனா பரவுவதற்கே வழி வகுக்கும். அதுமட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகத்தையும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் வேளையில், கூட்டமாக தேர்வு எழுதுவது மாணவர்களுக்கு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தும். இது தேர்வுகளில் அவர்களின் செயல்பாட்டை பாதித்து, எதிர்கால வாய்ப்புகளை சீரழிக்கும் ஆபத்தும் உள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.