This Article is From Apr 03, 2019

தந்தையே ஒன்றும் செய்யவில்லை, மகன் வந்து என்ன செய்யப் போகிறார்? எடப்பாடி தாக்கு

பலமுறை மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம், சிவகங்கை தொகுதியின் வளர்ச்சிக்கு ஒன்றுமே செய்யாத நிலையில், அவரது மகன் என்ன செய்யப்போகிறார் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

தந்தையே ஒன்றும் செய்யவில்லை, மகன் வந்து என்ன செய்யப் போகிறார்? எடப்பாடி தாக்கு

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் எச்.ராஜாவுக்கு ஆதரவாக சிவகங்கையில் முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழகம் வளர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்திலேயே மெகா கூட்டணி அமைந்துள்ளோம். மக்களுக்கு சேவை செய்யும் கட்சிகள் ஒருங்கிணைந்து மக்களை சந்தித்து வருகிறோம். ஆனால் எதிர்கட்சிகள் சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்து மக்களை மீண்டும் ஏமாற்றுகின்றன.

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியாக உள்ளது. தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது. மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்வதாகவும், நாட்டிலேயே மின்மிகை மாநிலமாகவும் தமிழகம் இருக்கிறது. மின்மிகை மாநிலமாக இருப்பதால் தான் தமிழகத்தில் தொழில் தொடங்க முதலீட்டாளர்கள் முன் வருகின்றனர்.

சாலை வசதி சிறப்பாக உள்ளதால், தொழில் துவங்க உகந்த மாநிலமாக, தொழில் முதலீட்டாளர்கள் விரும்புகிறார்கள். 304 தொழில் திட்டங்களுக்கு ஒப்பந்தமிடப்பட்டுள்ளது இதன் மூலம் ஐந்தரை லட்சம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும் 5 லட்சம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கும்

நாடு வளர்ச்சி அடையவும், நாட்டின் பாதுகாப்புக்கும் மோடி தான் பிரதமர் ஆக வேண்டும். பத்து லட்சம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்திய நாட்டின் நிதியமைச்சராக ஏற்கனவே இருந்தவர் சிதம்பரம். அவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்த அவர் உங்கள் தொகுதிக்கு ஒன்றும் செய்யவில்லை என்ற போது, அவரது மகன் வந்து என்ன செய்ய போகிறார்? அவரை நம்பி வாக்களித்தீர்கள் என்ன ஆனது? உங்கள் தொகுதி என்ன முன்னேற்றம் அடைந்தது?

தேர்தலில் ஜெயிப்பதோடு சரி, அடுத்த தேர்தலில் தான் மக்களை சந்திக்கின்றனர் என்று கடுமையாக குற்றம்சாட்டிய அவர், சிவகங்கை தொகுதியில் எச்.ராஜாவை ஆதரித்து தாமரைச் சின்னத்தில் வாக்களியுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.


 

.