தனிமைப்படுத்தப்பட்டவர்கள் செய்ய வேண்டியது என்ன? தமிழக அரசு அறிவுரை
ஹைலைட்ஸ்
- தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் உள்ள அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்.
- தனிமைப்படுத்தப்பட்டவர் பயன்படுத்தும் பொருட்களை யாரும் பயன்படுத்தக் கூடாது
- வீட்டை தினமும் 3 முறையாவது கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும்
தமிழகத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து தமிழக அரசு சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,412 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனா தொற்றால் 199 பேர் மரணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 33 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 738ஆக இருந்த நிலையில், நேற்று மட்டும் புதிதாக 96 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 834 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 27 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மேலும், 60,739 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அரசு கண்காணிப்பில் 230 பேர் உள்ளனர். இதுவரை 7,267 பேரிடம் சோதனைக்காக மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், வீட்டில் தனிமைப்பட்டு உள்ளவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், தனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு தனி கழிவறையுடன் கூடிய காற்றோட்டமான தனி அறையை ஒதுக்க வேண்டும்.
தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் உள்ள அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். வெளியே எங்கும் செல்லாமல் ஒதுக்கப்பட்ட அறையிலேயே இருக்க வேண்டும்.
பராமரிப்பு பணி செய்பவர் தவறாமல் முகக்சவசமும் கையுறையும் அணிந்திருக்க வேண்டும். தனிமைப்படுத்தப்பட்டவர் பயன்படுத்தும் பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது.
தனிமைப்படுத்தப்பட்டவரின் உடைகள், விரிப்புகளை தனியாக துவைத்து வெயிலில் காய வைக்க வேண்டும்.
முகக்கவசம், கையுறை ஆகியவற்றை கழற்றிய பின் கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
முதியோர், கர்ப்பிணிகள், குழந்தைகள் யாரும் தனிமைப்படுத்தப்பட்டவருடன் தொடர்பில் இருக்க கூடாது.
தனிமைப்படுத்தப்பட்டவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களையும் 28 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும்.
வீட்டை தினமும் 3 முறையாவது கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.