கான்பூர் விமான நிலையத்தில் சகோதரி பிரியங்காவுடன் ராகுல் காந்தி.
Kanpur: ஒரு நல்ல சகோதரன் என்றால் என்ன தெரியுமா? என்று கேள்வி எழுப்பும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அதற்கு கிண்டலாக பதிலும் அளித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் விமான நிலையத்தில் எதிர்பாராத விதமாக ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி சந்தித்தபோது நடத்திய உரையாடல் குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது.
அந்த வீடியோவில் முதலில் ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் சந்திக்கின்றனர். இதனையடுத்து இருவரும் தோல்களில் கைபோட்டபடி கேமராவை நோக்கி வருகின்றனர். அப்போது, ராகுல் காந்தி, ஒரு நல்ல சகோதரன் என்றால் என்ன தெரியுமா? என்று சிரித்துக்கொண்டே கேள்வி எழுப்புகிறார்.
நான் அதிக தூரம் பயணம் செய்தாலும் சிறிய ரக விமானத்திலேயே பயணம் செய்கிறேன். ஆனால் என்னுடைய சகோதரியோ குறைந்த தூரம் பயணம் செய்தாலும் அவர் பெரிய விமானத்தில் பயணம் செய்கிறார். ஆனாலும் அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்கிறார்.
இதைத்தொடர்ந்து இருவரும் தங்களது விமானிகளுடன் புகைப்படம் எடுத்து கொண்டு தங்களது ஹெலிகாப்டரில் ஏறி தனி தனியே தேர்தல் பிரசாரத்திற்கு புறப்பட்டனர்.
இந்த வீடியோ தற்போது, சமூகவலைதளத்தில் பேரன்பு கொண்ட சகோதரத்துவம் என பலராலும் பாரட்டப்பட்டு பகிரப்பட்டு வருகிறது.
மக்களவை தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தியை போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2014ஆம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் பேட்டியிட்ட அஜய் ராயை காங்கிரஸ் அறிவித்தது.
12 வருடங்களுக்கு முன்பே ராகுல் காந்தி தீவிர அரசியலில் இருந்துவருகிறார். பிரியங்கா கடந்த ஜனவரி மாதமே தீவிர அரசியலில் இறக்கப்பட்டார். தொடர்ந்து, உத்தரப்பிரதேச மாநில கிழக்கு பகுதி காங்கிரஸ் பொதுச் செயலாளராக அவர் நியமிக்கப்பட்ட அவருக்கு தேர்தல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது.