This Article is From Aug 02, 2018

காவேரி மருத்துவமனையை நோக்கி பாயும் மக்கள் வெள்ளம்… காரணம் என்ன?

முன்பிருந்ததைவிட அவரது உடல்நிலை தற்போது தேறியுள்ளதாக மருத்துவமனை அறிக்கை தெரிவித்துள்ளது

Chennai:

திமுக தலைவரும் 5 முறை முதலமைச்சராகவும் இருந்த கருணாநிதி கடந்த சில நாட்களாக சென்னை, ஆழ்வார்பேட்டையில் இருக்கும் காவேரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். முன்பிருந்ததைவிட அவரது உடல்நிலை தற்போது தேறியுள்ளதாக மருத்துவமனை அறிக்கை தெரிவித்துள்ள நிலையிலும், மருத்துவமனை வளாகத்துக்கு வெளியில் ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் தொடர்ந்து காத்திருந்த வண்ணம் இருக்கின்றனர். ‘எழுந்து வா, தலைவா’ என்ற சொல்லை மந்திரம் போல அவர்கள் உச்சரித்துக் கொண்டே இருக்கின்றனர். திமுக-வின் கீழ்மட்டத் தலைவர்களில் இருந்து உயர்மட்டத் தலைவர்கள் வரை, கூடியுள்ள தொண்டர்களை கலைந்து போகச் சொல்லியும் விடாப்படியாக தங்களது தலைவர் முகத்தை ஒருதடவையாவது பார்த்துவிட வேண்டும் என்ற வேட்கையில் மழையிலும் வெயிலிலும் காத்துக் கொண்டிருக்கின்றனர். 

அவர்களில் ஒருவர்தான் கோயம்புத்தூரில் டீ கடை வைத்திருக்கும் முருகன். தனது தலைவருக்கு உடல்நிலை மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தியை கேள்விபட்ட உடன், இரு சக்கர வாகனத்திலேயே பயணப்பட்டு சென்னைக்கு வந்துள்ளார் முருகன். ‘எனது இளமை காலத்தில், மத்திய அரசு, தமிழகத்தின் மீது திணிக்கப் பார்த்த இந்தி மொழியை எதிர்த்தே ஒரே தலைவர் கலைஞர் கருணாநிதிதான் என்பதை உணர்ந்தேன். அதுதான் அவரின்பால் என்னை கவர்ந்திழுத்தது’ என்றார்.

கட்டட வேலை செய்யும் குப்புசாமி அவரது குடும்பத்துடன் காவேரி மருத்துவமனை அருகில் காத்திருந்தனர். அவரின் கைகளில் இந்திய பிரதமர் இந்திரா காந்தியை எதிர்த்த கருணாநிதியின் தைரியத்தை பறைசாற்றும் விதத்தில் அமைந்துள்ள பதாகை. ‘அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்ட போது, அவர்தான் நெஞ்சுரம் கொண்டு எதிர்த்த தலைவர். அப்போது, ‘எனது பதவி என்பது துண்டு போன்றது. மாநிலத்தின் உரிமை நசுக்கப்படும் என்றால், அதைத் தூக்கிப் போடுவதில் எனக்குத் தயக்கம் இருக்காது’ என்று தெரிவித்தார்’ என்று வரலாற்று நிகழ்வை நினைவு கூறுகிறார்.

அவரது குடும்பத்தினர், ‘முதன் முதலாக எழை எளிய மக்கள் முழுமையான மருத்துவ வசதி பெற்றது ‘கலைஞர் காப்பீட்டுத் திட்டம்’ மூலம்தான்’ என்றனர். அந்தத் திட்டத்தின் கீழ், எழை எளிய மக்களும் தனியார் மருத்துவமனையில் கூட சிகிச்சைப் பெற முடியும் என்ற நிலை உருவாக்கப்பட்டது. 

பன்னீர் என்ற மாற்றுத் திறனாளியும் காத்திருந்நவர்களில் ஒருவர். கருணாநிதி அவருக்கு ஏன் பிடிக்கும் என்பதை கூறுகையில், ‘ஒரு முறை அவர் முதலமைச்சராக இருந்த போது, எங்கள் மாற்றுத் திறனாளி அமைப்பு போராட்டம் நடத்தினோம். அப்போது அவர் நேரடியாக களத்துக்கு வந்தார். கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக எங்களுக்கு அவர் உறுதியளித்தார். அப்போது அவர், நானும் மாற்றுத் திறனாளிதான் என்றார். அவர்தான் ‘மாற்றுத் திறனாளி’ என்கிற வார்த்தையையே முன் மொழிந்தவர்’ என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.

இப்படி காவேரி மருத்துவமனையின் வளாகத்துக்கு வெளியே இருப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் பின்னால் ஒரு கதை இருக்கிறது. அந்தக் கதையின் மையமாக இருப்பவர் கருணாநிதி. அந்த கரகரத்தக் குரலை இன்னும் ஒருமுறை கேட்டுவிட முடியாதா என்கிற ஏக்கத்தில் அவர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.  

.