This Article is From Jul 01, 2020

சாத்தான் குளம் சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியானது! போலீசாருக்கு புதிய சிக்கல்

இருவரும் நல்ல நிலைமையில் சென்றதால், அவர்கள் காவல்நிலையம் சென்ற பின்னரே காயம் அடைந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.  இந்த சிசிடிவி காட்சிகள் விசாரணையில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. 

பென்னிக்ஸ் கடையின் பக்கத்து கடையில் பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

Chennai:

சாத்தான் குளத்தில் தந்தை,  மகனான  ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் உயிரிழந்தது தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.  இதில் இடம்பெற்றிருக்கும் காட்சிகள் போலீசாரின் முதல் தகவல் அறிக்கைக்கு மாற்றமாக இருப்பதால், போலீசாருக்குச  சிக்கலை உண்டாக்கியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தை சேர்ந்த  தந்தை ஜெயராஜ்,  அவரது  மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த19ம் தேதி இரவு கைது செய்யப்பட்டதாக போலீசார் தங்களது  எஃப்.ஐ.ஆரில்  குறிப்பட்டிருந்தனர்.  கடையை இரவு 9 மணிக்கு மேல்  திறந்து வைத்திருந்ததாகவும், இது ஊரடங்கு விதி மீறலாக இருந்ததால் கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

குறிப்பாக அவர்கள் கைது செய்யப்பட்டபோது தரையில் உருண்டு பிரண்டு போராட்டம் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் உயிரிழந்த  ஜெயராஜின் மொபைல் கடைக்கு அருகேயிருந்த  சிசிடிவி காட்சிகள் தற்போது  வெளியாகியுள்ளன. 

அந்தபதிவில், போலீசார் குறிப்பிட்டது போன்று வாக்குவாதம் ஏதும் ஏற்படவில்லை.  ஜெயராஜ், பென்னிக்ஸ் தரையில் உருண்டதாக போலீஸ் கூறும் காட்சிகள் ஏதும் இல்லை. 

மொபைல் கடைக்கு வெளியே ஜெயராஜ் நிற்கிறார். பின்னர்,  நடந்து உள்ளே சென்று விடுகிறார்.  சில நிமிடங்களில் சிறிய குழு ஒன்று கடைக்கு வெளியே நிற்கிறது.  பின்னர் பென்னிக்ஸ் வேகமாக வெளியே வருகிறார். 

ஜெயராஜ் போலீஸ் வாகனத்திலும், பென்னிக்ஸ் அவரது நண்பரின் பைக்கிலும் ஏறி காவல் நிலையம் செல்லும் காட்சிகள் சிசிடிவியில் உள்ளன. 

இருவரும் நல்ல நிலைமையில் சென்றதால், அவர்கள் காவல்நிலையம் சென்ற பின்னரே காயம் அடைந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.  இந்த சிசிடிவி காட்சிகள் விசாரணையில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. 

முன்னதாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு போலீசார் ஆளாகியுள்ளனர். இதுதொடர்பாக மாஜிஸ்திரேட் தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் 3 போலீசார் நாளை காலை 10.30க்கு ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

டி.எஸ்.பி. பிரதாபன், கூடுதல் டி.எஸ்.பி. டி.குமார் மற்றும் போலீஸ் கான்ஸ்டபிள் மகாராஜன் ஆகியோருக்கு இந்த சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. 
 

.