குறைந்த காலத்தில் திரைத் துறையில் பிரபலமானவர் ‘பவர் ஸ்டார்' சீனிவாசன். தற்போது அவரைக் காணவில்லை என்று சென்னை, அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து காவல் நிலையத்தில் சீனிவாசனின் மனைவி தரப்பில் அளிக்கப்பட்டப் புகாரில், ‘பவர் ஸ்டாரிடம் பணம் கேட்டு சிலர் மிரட்டியுள்ளனர். இந்நிலையில், அவர் திடீரென்று காணாமல் போயுள்ளார்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
புகார் கொடுத்த சில மணி நேரங்களில், ஊட்டியில் சீனிவாசன் இருப்பதாக தகவல் தெரிந்துள்ளது.
இந்த சிக்கலான புகார் குறித்து சீனிவாசனின் மகள் கூறுகையில், ‘அப்பாவைக் காணவில்லை என்று புகார் எழுதியது எனது அம்மாதான். ஆனால், புகாரை நான் தான் காவல் நிலையத்தில் கொடுத்தேன். இதையடுத்து, அம்மாவை போலீஸ் ஸ்டேஷன் வருமாறு கூறினர். அப்போது, அப்பாவையும் அம்மாவையும் கொஞ்ச நேரத்தில் அனுப்பிவிடுவதாக என்னிடத்தில் போலீஸ் கூறியது. ஆனால், இருவரும் இதுவரை திரும்பவில்லை.
குடும்பத்தில் நிலவும் சொத்துப் பிரச்னையை சமாளிக்க முடியாமல், சீனிவாசன் ஊட்டிக்குச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சீனிவாசன் குடும்பத்தாரையும் ஊடகங்களிடம் இது குறித்து பேசக் கூடாது என்று சிலர் மிரட்டி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்விவகாரம் குறித்து சீனிவாசன் மகள் மேலும் பேசுகையில், ‘எனது அப்பா, அம்மா இருவரும் வீட்டுக்கு வர வேண்டும். நானும் எனது தங்கை இருவரும் தான் வீட்டில் இருக்கிறோம். எங்களுக்குப் பாதுகாப்பு இல்லை. போலீஸ் தரப்பும் எங்களுக்குப் பாதுகாப்புத் தர மறுத்துவிட்டது. நாளை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்குச் சென்று புகார் அளிக்க உள்ளோம்' என்று கூறியுள்ளார்.