கேரளாவில் தொடர்ந்து பல பாதிரியார்கள் மீது வன்புணர்வு குற்றச்சாட்டுகள் எழுப்பப்படும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது
New Delhi: "பாதிரியார்கள் எல்லாம் தொடர்ந்து வன்புணர்வு வழக்குகளில் குற்றம் சாட்டப்படுகிறார்கள். கேரளாவில் என்னதான் நடக்கிறது?" என்று நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்ச் நேற்று கேள்வி எழுப்பியுள்ளது. திருமணமான பெண்ணை நான்கு பாதிரியார்கள் மிரட்டி வல்லுறவு வைத்துக்கொண்டதாகக் கூறப்படும் வழக்கில் அவர்கள் மீது நடத்திய விசாரணை குறித்த அறிக்கையை ஆகஸ்ட் 6ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அம்மாநில காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டுள்ள பாதிரியார்கள் சோனி வர்கீஸ், ஜெய்ஸ் கே ஜார்ஜ் ஆகியோரின் முன்ஜாமின் மனுவில் முடிவெடுக்கப்படும் வரை அவர்கள் இருவரையும் கைது செய்யாமல் இருக்கவும் ஜூன் 19 இல் உத்தரவிட்டிருந்தது. முன்னதாக, கேரள உயர்நீதிமன்றம் இவர்களது முன்ஜாமின் மனுவை நிராகரித்ததால் இவர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நால்வருள் இருவர் ஏற்கனவே சரணடைந்துவிட்டனர். மீதமுள்ள இருவர்தான் முன்ஜாமின் கோரி இருந்தனர்.
கொட்டியூரைச் சேர்ந்த வேறொரு வன்புணர்வு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரிய மனுவை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. ஆகஸ்ட் 1 முதல் அவ்வழக்கில் நீதிமன்ற விசாரணை தொடங்கவுள்ளது.
இதில் குற்றம் சாட்டப்பட்ட இரு மருத்துவர்கள் ஹைதர் அலி, டெஸ்ஸி ஜோஸ், மருத்துவமனை நிர்வாகி ஆன்சி மாத்யூ ஆகியோரின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர் பசந்த், "வழக்கின் விசாரணையை ஒருவார காலத்துக்கு ஒத்தி வைக்க வேண்டும். விசாரணைக்கு முன்பு தம் தரப்பு விளக்கம் அளிக்க அனுமதி அளிக்கவேண்டும்" என்று கோரினார். இதில் இவர்கள் முதன்மைக் குற்றவாளிகள் இல்லை என்றும், வன்புணர்ந்த குற்றச்சாட்டுக்கு உள்ளானவருடன் இணைந்து விசாரணையை சந்திப்பது சமூகத்தில் மதிப்பு மிகுந்த மருத்துவர்களாக விளங்கும் தம் தரப்புக்கு கடினமாக இருக்கும் என்றும் கூறினார்.
வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் சமூகத்தில் செல்வாக்கு படைத்த அதிகாரம் மிக்கவர்கள் என்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை ஏழ்மையான பின்னணி உடையவர் என்றும் கூறி கேரள அரசு இவர்களது மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்தது.
இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க மறுத்துவிட்டது. எனினும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு விளக்கத்தை ஆகஸ்ட் 1க்கு முன்பாக கேட்க சம்மதம் தெரிவித்தது.
மைனர் சிறுமியைக் கத்தோலிக்க பாதிரியார் வன்புணர்ந்ததாகக் கூறப்படும் இக்கொட்டியூர் சம்பவம் தொடர்பாக ஜூலை 13இல் கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம் இவை மிகவும் தீவிரமான குற்றச்சாட்டுகள் என்று கூறி இருந்தது.
குற்றத்தை மறைக்க முயன்றதாகவும் ஆதாரத்தை அழித்ததாகவும் போலிசாருக்குத் தகவல் தெரிவிக்காததற்காகவும் இதில் இரு மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகி மீது போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்டவர்களின் மருத்துவமனையில் வைத்துதான் மைனர் சிறுமியின் பிரசவம் நடந்தது என்பதும் அவர் இவர்களது கண்காணிப்பில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.