"முன்னர் நடைமுறையில் இருக்கும் இட ஒதுக்கீடுக்கான இலக்கையே நாம் இன்னும் அடையவில்லை"
பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுப் பிரிவில் உள்ளவர்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரம் தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நேற்று அதிமுக தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக, விசிக, மதிமுக, காங்கிரஸ், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் கலந்து கொண்டு, தங்களது கருத்துகளை எடுத்து வைத்தனர்.
கருத்துக் கேட்புக் கூட்டம் முடிவடைந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், “இட ஒதுக்கீட்டில் பொருளாதாரக் காரணி ஏன் சேர்க்கப்பட வேண்டும். இட ஒதுக்கீட்டுக்கும் பொருளாதார சமத்துவத்துக்கும் பாலம் கட்டக் கூடாது. இட ஒதுக்கீடு என்பது எந்த கொள்கையின் அடிப்படையில் கொடுக்கப்பட்டது என்பதை நாம் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். முன்னர் நடைமுறையில் இருக்கும் இட ஒதுக்கீடுக்கான இலக்கையே நாம் இன்னும் அடையவில்லை. எனவே, இது போன்ற புதிய வகையிலான ஒதுக்கீடுகள் இப்போது கூடாது என்பது தான் மக்கள் நீதி மய்யத்தின் கருத்து” என்று கூறியுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரம் குறித்து, “இடஒதுக்கீடு என்பது ஏழ்மையைப் போக்கும் கருவி அல்ல; நூற்றாண்டுகளாக வாய்ப்புகள் மறுக்கப்பட்டு சமூக ரீதியாக பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அரசியல் சட்டம் வழங்கிய உரிமை. தமிழகத்தைப் பொறுத்தவரை, பெருந்தலைவர் காமராஜர் அவர்களோ, தலைவர் கலைஞர் அவர்களோ, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களோ - ஏன் மறைந்த அம்மையார் ஜெயலலிதா அவர்களோ, இடஒதுக்கீட்டுக் கொள்கையில் சமரசம் செய்து கொள்ளவில்லை. எனவே, பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களைத் தீர்மானிக்கும் வரையறை நிச்சயமற்றது என்பதையும் கவனத்தில் கொண்டு, சமூக ரீதியாக முன்னேறியவர்களுக்கும் 10%இடஒதுக்கீடு என்பதற்கு செவி சாய்த்து கிட்டத்தட்ட நூறாண்டு காலமாக தமிழகம் காத்து வரும் சமூகநீதிக்கு களங்கம் கற்பிக்க அனுமதிக்கக் கூடாது” என்று கூறியுள்ளார்.
கருத்துக் கேட்புக் கூட்டத்தின் இறுதியில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், “இந்த 10 சதவிகித இட ஒதுக்கீட்டைப் பொறுத்தவரையில், சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை பெறப்பட்டு அதற்கு ஏற்றாற் போல செயல்படுவோம். தமிழகத்தின் சமூக நீதி கொள்கையில் எந்த மாற்றமும் இருக்காத வகையில் முடிவெடுக்கப்படும்” என்று கூறினார்.
கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் 10% சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக சிபிஐ, காங்கிரஸ், பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம் கட்சிகள் கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.