This Article is From Aug 21, 2019

ப.சிதம்பரத்துக்கு முற்றும் நெருக்கடி- சுப்ரமணியன் சுவாமி, எச்.ராஜா என்ன சொல்கிறார்கள்..?

ப.சிதம்பரத்தின் மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் முன்னர் வைக்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

ப.சிதம்பரத்துக்கு முற்றும் நெருக்கடி- சுப்ரமணியன் சுவாமி, எச்.ராஜா என்ன சொல்கிறார்கள்..?

"அவருக்கு நாங்கள் பக்கபலமாக இருப்போம். என்ன விளைவுகள் ஏற்பட்டாலும் உண்மையை நிலைநாட்டப் போராடுவோம்”- பிரியங்கா காந்தி

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் வழங்க டெல்லி நீதிமன்றம், நேற்று மறுப்பு தெரிவித்துவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார் சிதம்பரம் (P Chidambaram). அந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் உச்ச நீதிமன்றமும், அவருக்கு முன் ஜாமீன் கொடுக்க மறுத்துவிட்டது. ப.சிதம்பரத்தின் மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் முன்னர் வைக்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

சிபிஐ-யும் அமலாக்கத் துறையும் ப.சிதம்பரத்தை கைது செய்ய முனைப்புக் காட்டி வரும் நேரத்தில் பாஜக-வின் எச்.ராஜா, “ப.சிதம்பரமும் அவரது குடும்பமும் ஊழலின் ஊற்றாகும். அவரை யாராலும் காப்பாற்ற முடியாது” என்று ட்வீட்டியுள்ளார். முன்னதாக பிரியங்கா காந்தி வத்ரா, “மிகவும் திறமையான மதிக்கப்படக்கூடிய ராஜ்ய சபா உறுப்பினரான ப.சிதம்பரம், நமது நாட்டுக்காக பல ஆண்டு காலம் விஸ்வாஸ்த்தோடு உழைத்திருக்கிறார். அவர் நாட்டின் உள்துறை மற்றும் நிதி அமைச்சராக இருந்துள்ளார். அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதிராக துணிச்சலோடு உண்மையைப் பேசுவார். அரசின் குறைகளை சுட்டிக் காட்டுவார். ஆனால் அந்த உண்மைகள், கோழைகளுக்குப் பிரச்னையாக உள்ளது. அதனால் அவர் அலைக்கழிக்கப்படுகிறார். அவருக்கு நாங்கள் பக்கபலமாக இருப்போம். என்ன விளைவுகள் ஏற்பட்டாலும் உண்மையை நிலைநாட்டப் போராடுவோம்” என்று கூறியிருந்தார். 

அதற்கு எச்.ராஜா, “அவருடனே இருங்கள். நேஷனல் ஹெரால்டு வழக்கில் உங்கள் குடும்பத்தோடு அவர் இருப்பார்” என்று கேலி செய்துள்ளார். 

ப.சிதம்பரத்தை அரசியல் ரீதியாக தொடர்ந்து எதிர்த்து வரும் பாஜக-வின் சுப்ரமணியன் சுவாமி, “நேர்மையற்ற சிதம்பரம் தலைமறைவாக இருக்கிறார். சிபிஐ-யும் அமலாக்கத் துறையும் அவரை தேடி வருகிறது. சிதம்பரத்துக்கு எதிராக அமலாக்கத் துறை லுக்-அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது நல்ல முடிவு” என்று கூறியுள்ளார். 

கடந்த 2007-ஆம் ஆண்டில் மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு, அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், இந்த விவகாரத்தில் அந்த நிறுவனத்துக்கு சாதகமாக கார்த்தி சிதம்பரம் செயல்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. 

இதுதொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. அதனடிப்படையில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. 

.