தமிழகத்தில் சென்ற ஆண்டு பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்று சென்னையில் டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதற்கான ஆலோசனை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆய்வுக் கூட்டத்தில் உரையாற்றிய பின்னர் செய்தியாளரைச் சந்தித்த அமைச்சர் வேலுமணி, ‘தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், கொசு உற்பத்தியைத் தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று கலந்தோலிசித்தோம்.
சென்ற ஆண்டை ஒப்பிடும் போது டெங்கு காய்ச்சல் பாதிப்பு இந்த ஆண்டு வெகுவாக குறைந்துள்ளது. ஒன்றிரண்டு பேருக்குத் தான் அதைப் போன்ற காய்ச்சல் ஏற்படுகிறது. அதையும் ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து, காய்ச்சல் பரவுவதைத் தடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விஷயத்தில் சுகாதாரத் துறையுடன் இணைந்து உள்ளாட்சித் துறையும் செயல்படும். மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு விரைந்து செய்யும்' என்று தெரிவித்தார்.