Coronavirus in TN: '743 ரத்த மாதிரிகள் இதுவரை சோதனை செய்யப்பட்டுள்ளன'
ஹைலைட்ஸ்
- தமிழகத்தில் இதுவரை 15 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
- இன்று சென்னையில் புதிதாக 3 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி
- இன்று மாலை முதல் தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது
Coronavirus in TN: இந்திய அளவில் 450-க்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை 9 பேர் இறந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது வரை 15 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பது குறித்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தகவல் வெளியிட்டுள்ளார். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், “தமிழகத்தில் இதுவரை 2,09,163 பேருக்கு கொரோனா வைரஸ் இருக்கிறதா என்று சோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 15,298 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.
தனிமைப்படுத்தலுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வார்டுகளில் 9,154 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. தற்போது கொரோனா அறிகுறிகள் இருப்பதாகக் கருதி 116 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 743 ரத்த மாதிரிகள் இதுவரை சோதனை செய்யப்பட்டுள்ளன. அதில் 608 மாதிரிகளில், கொரோனா இல்லை என்று முடிவுகள் வந்துள்ளன. 15 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 120 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா இருந்த ஒருவர், குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்,” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தமிழகத்தில் நேற்று வரை 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை மாநில அரசு உறுதி செய்திருந்த நிலையில், இன்று சென்னையில் புதிதாக மூவருக்கு கோவிட்-19 எனப்படும் கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்துள்ளார் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.
இது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர், “சென்னையில் புதிதாக 3 பேருக்கு கோவிட்-19 இருப்பது தெரியவந்துள்ளது. மூவரும் வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பியவர்கள். அதில் ஒருவர், 74 வயது ஆண். அமெரிக்காவிலிருந்து சென்னை வந்துள்ளார். தற்போது ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்னொருவர், 52 வயதுப் பெண். அமெரிக்காவிலிருந்து திரும்பிய அவர் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். சுவிட்சர்லாந்திலிருந்து சென்னை வந்த 25 வயதுப் பெண் மூன்றாவது நபர். அவர் கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூவரும் முறையே போரூர், புரசைவாக்கம் மற்றும் கீழ்க்கட்டளையில் வசித்து வந்தனர். அனைவரும் தற்போது தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். மூவரின் ஆரோக்கியமும் ஸ்திரமாகவே உள்ளது,” என்று தகவல் தெரிவித்துள்ளார்.