"அரசு தரப்பு, இந்த விவகாரத்தில் முழு வெளிப்படைத்தன்மையுடன்தான் செயல்பட்டு வருகிறது"
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதர் தரிசனத்தின்போது சுமார் 1,000 கோடி ரூபாய் காணிக்கையாக வந்தது என்றும் அதை அரசு தரப்பு சரிவர கணக்கில் காட்டவில்லை என்றும் சமூக வலைதளங்களில் ஒரு செய்தி உலாவருகிறது.
47 நாட்கள் தரிசனம் முடிந்து, வரதராஜ பெருமாள் கோயிலில் இருக்கும் குளத்தில் சயனகோலத்தில், கடந்த 17 ஆம் தேதி அத்திவரதர் வைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, “47 நாட்கள் நடந்த தரிசனத்தில் உண்டியல் காணிக்கையாக மட்டும் சுமார் 7 கோடி ரூபாய் வந்துள்ளது. இது முதற்கட்டமாக எண்ணப்பட்ட தொகைதான். துல்லியமான தொகை எவ்வளவு என்பது குறித்து மீண்டும் ஒருமுறை எண்ணிய பின்னர் அறிவிப்போம்” என்றார்.
ஆனால், இந்த புள்ளிவிவரம் பொய்யானது என்று சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வந்து கொண்டிருக்கிறது. அந்த சமூக வலைதளதகவல்படி, “அரசு தரப்பில் அத்திவரதர் தரிசனத்துக்கு சுமார் 1 கோடி பேர் வந்ததாக சொல்லப்படுகிறது. அப்படிப் பார்த்தால் 1 நபர் 10 ரூபாய் செலுத்தியிருந்தாலே 10 கோடி ரூபாய் காணிக்கையாக வந்திருக்கும். ஆனால், வெறும் 7 கோடி ரூபாய்தான் காணிக்கையாக வந்துள்ளது என்று சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்வது” என்ற ரீதியில் கேள்வியெழுப்பப்பட்டிருந்தது.
இது குறித்து தமிழக அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “அத்திவரதர் தரிசனத்தின்போது எவ்வளவு காணிக்கையாக வந்தது என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் ஏற்கெனவே தகவல் தெரிவித்துவிட்டார். அதுமட்டுமல்லாமல், சமூக வலைதளங்களில் வரும் வதந்திகளுக்கெல்லாம் விளக்கம் கொடுக்க முடியாது. அரசு தரப்பு, இந்த விவகாரத்தில் முழு வெளிப்படைத்தன்மையுடன்தான் செயல்பட்டு வருகிறது. சாமி தரிசனம் செய்ய வந்த அனைவரும் உண்டியலில் காணிக்கை செலுத்தி இருப்பார்கள் என்று சொல்வதற்கில்லை” என்று விளக்கம் கொடுத்தார்.