#SorrySujith - 'தமிழக அரசு சார்பில், சுஜித்தின் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் நிவாரண நிதி தரப்படும். அதிமுக சார்பில், 10 லட்ச ரூபாய் நிவாரணம் தரப்படும்'
#SorrySujith - ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுஜித் (Sujith) 80 மணி நேர போராட்டத்திற்கு பின் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் தமிழகத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்று சுஜித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி (Edappadi Palanisamy), சுஜித் வீட்டுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். சுஜித்தின் பெற்றோருக்கும் ஆறுதல் தெரிவித்தார் முதல்வர்.
திருச்சி (Trichy), மணப்பாறை (Manapparai) அருகே நடுக்காட்டுப்பட்டியில் (Nadukkapatti) ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் உயிரிழந்துவிட்டான். 80 மணி நேரத்திற்கு மேலாக மேற்கொள்ளப்பட்டு வந்த மீட்புப் பணிகள் இறுதியில் தோல்வியில் முடிந்துவிட்டன.
முன்னதாக ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் உயிரிழந்துள்ளதாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இரவு 10.30 மணியளவில் இருந்து ஆழ்துளை கிணற்றில் இருந்து அழுகிய வாடை வந்ததாக அவர் கூறினார்.
இதையடுத்து, பல்வேறு கட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டு நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருந்த சுஜித்தின் உடலை மீட்டு வெளியே எடுத்தனர். பின்னர், அந்த உடல் ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு, சுஜித்தின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், சுஜித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
சுஜித்தின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி, “சிறுவன் சுஜித்தை மீட்க அரசு எல்லா வகையிலும் செயல்பட்டது. தீயணைப்புத் துறையைச் சேர்ந்த 200 பேர், காவல் துறையைச் சேர்ந்த 200 பேர், பல்வேறு துறையைச் சேர்ந்த அதிகாரிகள், நபர்கள் இந்த மீட்புப் பணியில் ஈடுபட்டனர். என் ஆலோசனையின்படி, அமைச்சர்கள் பலர் இரவு பகல் பாராது பணி செய்தனர். துணை முதல்வரும் நேரடியாக வந்து மீட்புப் பணி குறித்து ஆலோசனை வழங்கினார்.
ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், மீட்புப் பணியில் ஏற்பட்ட தொய்வு காரணமாகத்தான் சிறுவனை உயிருடன் மீட்க முடியவில்லை என்று தவறான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ராணுவத்தை அழைத்திருக்கலாம் என்கிறார். அது பொய் என்பது ஊடகங்கள் நொடிக்கு நொடி காண்பித்த காட்சிகள் மூலமே மக்கள் தெரிந்து கொள்ளலாம். தேசிய பேரிடர் மீட்புப் படை, அண்ணா பல்கலைக்கழக வல்லுநர்கள், ஓ.என்.ஜி.சி வல்லுநர்கள் உள்ளிட்டவர்களின் உதவியுடன்தான் சிறுவனை மீட்கப் போராடினோம் என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.
2009 ஆம் ஆண்டு, தேனி மாவட்டத்தில் 6 வயது சிறுவன், ஆழ்துளை கிணற்றில் விழுந்தபோது, திமுக அரசு, இறந்த நிலையில்தான் மீட்டார்கள். இவர்களுடைய ஆட்சி காலத்தில் ஏன் ராணுவத்தை அழைத்து சிறுவனை மீட்கவில்லை.
தமிழக அரசு சார்பில், சுஜித்தின் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் நிவாரண நிதி தரப்படும். அதிமுக சார்பில், 10 லட்ச ரூபாய் நிவாரணம் தரப்படும். இருக்கின்ற எல்லா தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தித்தான் குழந்தையை உயிருடன் மீட்கப் போராடினோம். ஆனால், எவ்வளவு போராடியும் எங்களால் சிறுவனை மீட்க முடியவில்லை என்பது மிகுந்தது வேதனைக்கு உரியது,” என்று கொந்தளிப்புடன் பேசினார்.
தொடர்ந்து ஒரு நிருபர், “ஆழ்துளை கிணறுகள் தொடர்பாக இருக்கும் சட்டங்கள் சரியாக செயல்படுத்தாதது தான் சுஜித் மரணத்திற்குக் காரணமாக அமைந்துவிட்டதா?” என்றார். அதற்கு முதல்வர் பழனிசாமி, “இந்த கிணறு இருக்கும் இடம் ஒரு தோட்டம். தனி நபருக்குச் சொந்தமான தோட்டத்தில் இப்படி ஒரு கிணறு இருக்கிறது என்பதைப் பற்றி அரசுக்குத் தெரிவித்தால்தான் அது குறித்து நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இனிமேல், இதைப் போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணறுகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று உறுதியளித்தார்.