"தமிழகத்தில் இருக்கும் ஒட்டுமொத்த வாகன ஓட்டிகளும், வாகனத்தை வைத்திருப்பவர்களும் சுங்கச்சாவடிகள் அகற்றப்பட வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள்"
தமிழக அளவில் தேசிய நெடுஞ்சாலைகள் பலவற்றில் சுங்கச்சாவடிகள் மிக அதிக அளவில் அமைக்கப்பட்டுள்ளன. ஆண்டுக்கு ஆண்டு இந்த சுங்கச்சாவடிகளில் கட்டணங்களும் உயர்த்தப்படுகின்றன. இதற்கு எதிராக பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் நடந்து வருகின்றன. தமிழகத்தில் வாகனம் ஓட்டும் பலரும் இந்த சுங்கச்சாவடிகளினால் அவதிப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
இந்த சுங்கச்சாவடி பிரச்னைக்கு எதிராக தொடர்ந்து போராடி வருபவர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன். நீதிமன்றங்களில் சுங்கச்சாவடிகளுக்கு எதிராக பல்வேறு வழக்குகளைத் தொடர்ந்துள்ள வேல்முருகன், ஒருமுறை அந்த அமைப்புகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் சுங்கச்சாவடி ஒன்றை அடித்து நொறுக்கினார்.
அவர் இந்தப் பிரச்னையைத் தீர்ப்பது பற்றி பேசியபோது, “சுங்கச்சாவடி பிரச்னைகளைத் தீர்க்க வரே வழி, அவற்றை முழுவதுமாக அகற்றுவதுதான். அதற்கு என்ன அவசியம் என்று நான் சொல்கிறேன். இந்தியாவில் ஒரு வாகனத்தை நாம் வாங்கினால், வாழ்நாள் முழுவதும் நாட்டில் பயணிப்பதற்கென்று சாலை வரி விதிக்கப்படுகிறது. அப்போது ஒரு பெரும் தொகை அரசுக்குக் கொடுக்கப்படுகிறது.
இந்நிலையில் அதையும் தாண்டி, 30 கிலோ மீட்டருக்கு ஒரு இடத்தில் சுங்கச்சாவடியை நிறுவி அதன் மூலம் பகல் கொள்ளை அடிக்கப்படுகிறது. தமிழகத்தில் இருக்கும் ஒட்டுமொத்த வாகன ஓட்டிகளும், வாகனத்தை வைத்திருப்பவர்களும் சுங்கச்சாவடிகள் அகற்றப்பட வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். அந்த வகையில்தான் அவற்றை நீக்குவது ஒன்றுதான் ஒரே வழி என்கிறோம். வாகன ஓட்டிகளுக்கு இந்த சுங்கச்சாவடிகளால் மிகுந்த மன உளைச்சல் ஏற்படுகிறது,” என்று கொதித்தார்.