தமிழகத்தில் மொத்தம் 309 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.
ஹைலைட்ஸ்
- சென்னையில் மொத்தம் 44 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
- அதிபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 10 பேருக்கு கொரோனா
- தமிழகத்தில் 309 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி
தமிழகத்தில் இதுவரை 309 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் 44 பேருக்கு கொரோனா இருப்பது சோதனை மூலம் தெரிய வந்துள்ளது.
தமிழக நிலவரம் பற்றி சுகாதாரத் துறைச் செயலர் பீலா ராஜேஷ் அளித்த பேட்டியில் கூறியதாவது-
தமிழகத்தில் நேற்று மட்டும் கூடுதலாக 75 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 74 பேர் டெல்லி மாநாட்டுக்குச் சென்றவர்கள். இன்னொருவர் சென்னையைச் சேர்ந்தவர். ஆக மொத்தம் 309 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.
டெல்லி மாநாட்டில் தமிழகத்தில் இருந்து 1,103 பேர் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. முடிவுகள் ஒவ்வொன்றாக தெரிந்து வருகின்றன.
டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் 264 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மற்றபடி, பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சை முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா கண்காணிப்பு மற்றும் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 17 இடங்களில் ஆய்வகங்கள் உள்ளன. இந்த வாரத்திற்குள் கூடுதலாக 6 ஆய்வகங்கள் ஏற்படுத்தப்படும். நம்மிடம் 12 ஆயிரம் சோதனை கருவிகள் இருக்கின்றன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் சென்னையில் கொரோனா நிலவரம் பற்றி, பெருநகர் சென்னை மாநகராட்சி அளித்த தகவலின்படி, “சென்னையில் மொத்தம் 15 மண்டலங்கள் உள்ளன. அதில் திருவொற்றியூர் மண்டலத்தில் 2 பேருக்கும், தண்டையார்பேட்டையில் 5 பேருக்கும், ராயபுரத்தில் 10 பேருக்கும், திரு.வி.க நகரில் ஒருவருக்கும், அண்ணா நகரில் 7 பேருக்கும், தேனாம்பேட்டையில் 4 பேருக்கும், கோடம்பாக்கத்தில் 6 பேருக்கும், வளசரவாக்கத்தில் 2 பேருக்கும், ஆலந்தூரில் ஒருவருக்கும், அடையாரில் 2 பேருக்கும், பெருங்குடியில் 3 பேருக்கும், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் ஒருவருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மணலி, மாதவரம், அம்பத்தூர் ஆகிய மண்டலங்களில் யாருக்கும் கொரோனா இல்லை,” என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.