This Article is From Dec 31, 2018

‘தமிழகத்துக்கு இந்த ஆண்டு எவ்வளவு மழை..?’- வானிலை மையம் விரிவான தகவல்

5 மாவட்டங்களில் 50 முதல் 40 சதவிகிதம் குறைவாகவும், 5 மாவட்டங்களில் 30 முதல் 20 சதவிகிதம் கம்மியாகவும், 4 மவட்டங்களில் 15 முதல் 1 சதவிகிதம் குறைவாகவும் மழை பெய்துள்ளது

‘தமிழகத்துக்கு இந்த ஆண்டு எவ்வளவு மழை..?’- வானிலை மையம் விரிவான தகவல்

தமிழகத்திற்கு வட கிழக்கு பருவமழைதான், அதிக மழை பொழிவைக் கொண்டு வரும். இந்த ஆண்டு தமிழகத்திற்கு பருவமழை எப்படி இருந்தது என்பது குறித்து வானிலை ஆய்வு மையம் விரிவாக தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன். ‘இந்த முறை பெய்துள்ள வட கிழக்கு பருவமழை இயல்பைவிட 24 சதவிகிதம் குறைவானதாகும். 2018-ல் வட கிழக்கு பருவ மழை 4 மாவட்டங்களில் இயல்பைவிட 50 சதவிகிதம் குறைவாக பெய்துள்ளது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, சென்னை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் மழையளவு இயல்பைவிட 50 சதவிகிதம் குறைவு.

5 மாவட்டங்களில் 50 முதல் 40 சதவிகிதம் குறைவாகவும், 5 மாவட்டங்களில் 30 முதல் 20 சதவிகிதம் கம்மியாகவும், 4 மவட்டங்களில் 15 முதல் 1 சதவிகிதம் குறைவாகவும் மழை பெய்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும்தான், பருவமழை இயல்பைவிட அதிகம்.

பருவமழையைப் பொறுத்தவரை நமது கணிப்புகள் தவறாகிவிட்டன. நல்ல மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த முறை 4 புயல்கள் உருவாகின. டிட்லி, ரூபன் மற்றும் பெய்ட்டி புயல்கள் நமக்குச் சாதகமாக அமையவில்லை. கஜா புயல் மட்டும்தான் மழையைக் கொண்டு வந்தது.

குறிப்பாக, தமிழக வட மாவட்டங்களில் மழை குறைவாக பெய்துள்ளது. காற்றழுத்தத் தாழ்வு நிலைகள், மேற்கு நோக்கி நகராததே இதற்குக் காரணம்' என்று கூறியுள்ளார்.

.