10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு என்ன அவசரம்? மு.க.ஸ்டாலின் கேள்வி
10ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்கக் கோரி தமிழக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் மார்ச் 24ம் தேதி முதல் பொது ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள், வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள் மூடப்பட்டு உள்ளன. இதனால், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தன.
பள்ளிகள் ஒத்திவைக்கப்பட்டதால், அனைத்து வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்த முடியாத சூழ்நிலை உருவானதால் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. தொடர்ந்து, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என்று அரசு அறிவித்தது.
இதனிடையே, "ஜூன்.1ம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று அறிவித்தார். 12ம் வகுப்பு கடைசி தேர்வை எழுதாத 36 ஆயிரம் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு ஜூன் 4ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்கக் கோரி தமிழக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு என்ன அவசரம்? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொரோனா பீதியும் அச்சமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. கொரோனா அச்சம் அதிகரித்துள்ள நிலையில் தேர்வு அறிவிப்பு பெற்றோர், மாணவர்கள் மனதில் மேலும் பதற்றம் உருவாக்கும். தேர்வு தேதி அறிவிக்கும் முன்பு ஆசிரியர்-பெற்றோர் சங்க பிரதிநிதிகளோடு பரிசீலிக்கப்பட்டதா?
பெற்றோர் மாணவர்களை மனரீதியாக தயார் படுத்திய பின்பு தேர்வு அறிவிப்பதே சரியாக இருக்கும். கொரோனா ஓரளவு கட்டுக்குள் வந்தபின் தேர்வு நடத்துவதே சரியானது. எனவே, தமிழக அரசு 10ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்கக் வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.