Maharashtra: சட்டமன்ற உறுப்பினர்கள், ஒருவர் பின் ஒருவராக சரத் பவாரின் பக்கம் சாயத் தொடங்கினர்
Mumbai: Maharashtra Politics - மகாராஷ்டிராவில் யாரும் எதிர்பாராத விதமாக அமைந்த பாஜக (BJP) தலைமையிலான ஆட்சிக்கு எதிரான வழக்கில் நேற்று உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பை வழங்கியது. ஒரு நாளைக்குள் பெரும்பான்மையை அரசு நிரூபிக்க வேண்டும் என்று நீதிமன்றம், தீர்ப்பில் குறிப்பிட்டது. இந்தத் தீர்ப்பு வந்த சில மணி நேரங்களிலேயே, தன் முன்னால் இருக்கும் இமாலய சவால் பாஜகவுக்குத் தெரிந்திருந்தது. பாஜகவுடன் திடீர் கூட்டணி அமைத்து, துணை முதல்வராக பொறுப்பேற்ற தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் (Ajit Pawar), மெஜாரிட்டிக்குத் தேவையான எம்எல்ஏ-க்களை ஈர்க்க தவறிவிட்டார் என்று தகவல் தெரிந்த வட்டாரம் சொல்கிறது.
ஒரே நாளைக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வைத்த கெடுவால், எம்எல்ஏக்களை ஈர்ப்பதற்குப் போதுமான கால அவகாசம் இல்லை என்று அஜித் பவார், பாஜக-விடம் தெரிவித்தாராம். கிட்டத்தட்ட 1 மணி நேரம் இது குறித்து அவர், முதல்வராக இருந்த தேவேந்திர ஃபட்னாவிஸிடம் பேசியுள்ளார். அதைத் தொடர்ந்துதான் அஜித்தின் ராஜினாமா அறிவிப்பு வெளியானது.
சனிக்கிழமை காலை துணை முதல்வராக பொறுப்பேற்ற அஜித், “தேசியவாத காங்கிரஸின் அனைத்து எம்எல்ஏக்களும், கட்சியின் தலைவர் சரத் பவாரும் எனக்கு உறுதுணையாக இருப்பார்கள். நிலையான ஆட்சியை அமைப்பதற்கு அனைவரும் எனக்கு ஆதரவு தெரிவிப்பார்கள்,” என்று திட்டவட்டமாகக் கூறினார். ஆனால், அவர் பக்கம் இருந்த சட்டமன்ற உறுப்பினர்கள், ஒருவர் பின் ஒருவராக சரத் பவாரின் பக்கம் சாயத் தொடங்கினர். பலரும், “எங்களுகுக என்னவென்றே சொல்லப்படாமல் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்றனர்,” என்று வெளிப்படையாக ஊடகங்களிடம் தெரிவித்தனர்.
அஜித் பவார், பாஜகவுடன் கை கோர்த்தபோது, பெரும்பான்மையை நிரூபிக்க நேரம் நெருங்கும் வேளையில், எப்படியும் எம்எல்ஏக்களை ஈர்த்து விடுவதாக உறுதி கொடுத்துள்ளதாக தெரிகிறது. ஆனால், உச்ச நீதிமன்றம் கொடுத்த அதிரடித் தீர்ப்பினால், அனைத்துத் திட்டங்களும் தவிடுபொடியாகியதாம்.
மகாராஷ்டிராவில் பாஜக, தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், அதற்குப் பெரும்பான்மை இல்லாததனால், எதிர்க்கட்சி வரிசையில் அமர்கிறது. தற்போது 3 கொள்கை முரண்கொண்ட கட்சிகள், ஆட்சியமைப்பதால் அது சீக்கரமே கவிழ்ந்து, விரைவில் தேர்தல் வரும் என்ற நம்பிக்கையில் பாஜகவினர் உள்ளனர்.