This Article is From Jan 05, 2020

பொன்.ராதாகிருஷ்ணன் பேசியது கூட்டணி தர்மத்துக்கு அழகல்ல: ஜெயக்குமார்

ஜனநாயகத்தை காலில் போட்டி மிதிக்கும் ஜனநாயக விரோத கட்சி உலகத்திலே இருக்க முடியாது அது, திமுகவாகதான் இருக்க முடியும் என்றார். 

பொன்.ராதாகிருஷ்ணன் பேசியது கூட்டணி தர்மத்துக்கு அழகல்ல: ஜெயக்குமார்

உள்ளாட்சி தேர்தல் நடைபெறக்கூடாது என்பது தான் அவர்கள் எண்ணம் - ஜெயக்குமார்

பொன்.ராதாகிருஷ்ணன் பேசியது கூட்டணி தர்மத்துக்கு அழகல்ல என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த மாதம் 27 மற்றும் 30-ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 91 ஆயிரத்து 975 பதவிகளுக்கு இந்த தேர்தல் நடைபெற்றது. 

மொத்தம் உள்ள 37 மாவட்டங்களில் 27 மாவட்டங்களுக்கு தேர்தல் நடந்தது. மொத்தம் 515 மாவட்டக் கவுன்சிலர், 5090 ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. முதல் கட்ட தேர்தலின் போது 76.19 சதவீதம் வாக்குகளும், 2-ம் கட்ட தேர்தலில் 77.73 சதவீதம் வாக்குகளும் பதிவாகி இருந்தன.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று முன்தினம் நிறைவு பெற்று, அதிகார்ப்பூர்வ முடிவுகளும் அறிவிகப்பட்டன. அதில், தேசிய கட்சியான பாஜக கனிசமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவியில் 6 இடங்களையும், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவியில் 87 இடங்களையும் பாஜக கைப்பற்றியுள்ளது. 

இதுதொடர்பாக சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது, கட்சி எல்லோருடைய கருத்தின் அடிப்படையில் முடிவு எடுக்கும். தமிழகத்தில் பாஜக காலம் துவங்கி விட்டது, இதற்கு உதாரணம் தான் உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள். தமிழகத்தில் பாஜகவிற்கு மிக பெரிய வரவேற்பு உள்ளதை காட்டுகிறது என்றார்.

அத்துடன் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் குறித்து பேசிய அவர், தமிழக மக்கள் பாஜகவிற்கு கொடுத்துள்ள மிகப் பெரிய அங்கீகாரம். கூட்டணி கட்சிகளின் ஆதரவு இல்லை என்றாலும் நாங்கள் பல இடங்களில் வெற்றி பெற்று இருப்போம். 

தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டு இருந்தாலும், அதன் செல்வாக்கை காட்டி இருக்க முடியும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. 

என்னைப் பொருத்தவரை நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்தே போட்டியிட்டு இருக்கலாம் என்பதே, ஆனாலும் கூட்டணி கட்சிகளுடன் போட்டியிட்டோம் என்றார்.

இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது, ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக ஒரு நல்ல வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றியை மூடி மறைக்க தேர்தல் ஆணையரை அடிக்கடி சந்தித்து மனு அளிப்பது. தேவையில்லாத அழுத்தம் தேர்தல் ஆணையருக்கு கொடுப்பது உள்ளிட்ட செயல்களில் ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார். இதன்மூலம் அதிமுக குறுக்கு வழியில் வெற்றி பெற்றது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த நினைத்தார்.

உள்ளாட்சி தேர்தல் நடைபெறக்கூடாது என்பது தான் அவர்கள் எண்ணம். அதனால், தான் அதற்கு எதிராக தற்போதும் நீதிமன்றம் செல்கின்றனர். ஜனநாயகத்தில் வெற்றி பெற்றவர்கள் தங்களது கடமையை ஆற்ற உள்ள நிலையில், அதற்கு எதிராக நீதிமன்றம் செல்கின்றனர். இதை விட ஜனநாயகத்தை காலில் போட்டி மிதிக்கும் ஜனநாயக விரோத கட்சி உலகத்திலே இருக்க முடியாது அது, திமுகவாகதான் இருக்க முடியும் என்றார். 

மேலும், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்தே போட்டியிட்டு இருக்கலாம் கூறியது குறித்து அவரிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தவர், பொன்.ராதாகிருஷ்ணன் பேசியது கூட்டணி தர்மத்துக்கு அழகல்ல என்று கூறினார். 

.