ராஜஸ்தானில் இருக்கும் 200 சட்டசபைத் தொகுதிகளுக்கும் டிசம்பர் 7 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது
ஹைலைட்ஸ்
- 11 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன
- இந்த முறை காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்பு என தகவல்
- காங்கிரஸ் நேற்று முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது
New Delhi: ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவுக்கு, காங்கிரஸின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சச்சின் பைலட் புகழாரம் சூட்டியுள்ளார். பரபரப்பான தேர்தல் களத்தில் பைலட்டின் கருத்து கவனம் பெற்றுள்ளது.
என்டீடிவி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பைலட்டிடம், ‘ராஜே குறித்து 2 நேர்மறையான விஷயங்களைச் சொல்லுங்கள்' என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவர், ‘அமித்ஷாவுக்கு எதிராக பாஜக-வில் துணிவாக நின்ற ஒரே நபர் வசுந்தரா ராஜே தான். அந்த விதத்தில் அவரைப் பாராட்டுகிறேன். இன்னொன்று, தனிப்பட்ட நபராக அவர் மீது எனக்கு மரியாதை இருக்கிறது. அவரின் அதிகார முறையையும், எதேச்சதிகாரத்தையும் நான் எதிக்கிறேன்' என்று பதில் அளித்தார்.
சமீபத்தில் ராஜஸ்தானில் இடைத் தேர்தல் நடந்த போது, அதில் பாஜக படுதோல்வி அடைந்தது. இதையடுத்து மாநில பாஜக தலைவரான அசோக் பர்னாமியை அமித்ஷா, பதவியிலிருந்து நீக்க முனைந்தார். ஆனால், அவர் ராஜேவின் ஆதரவு பெற்ற நபர். இதனால், அசோகை நீக்கக் கூடாது என்று அமித்ஷாவிடம் பிடிவாதம் பிடித்தார் ராஜே. கடைசியில் ராஜே நினைத்தது தான் நடந்தது. இதை சுட்டிக் காட்டித் தான் சச்சின் பைலட் வசுந்தரா ராஜேவைப் பாராட்டினார்.
ராஜஸ்தானில் இருக்கும் 200 சட்டசபைத் தொகுதிகளுக்கும் டிசம்பர் 7 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. அதைத் தொடர்ந்து டிசம்பர் 11 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த முறை காங்கிரஸ் பெரும்பான்மைப் பெற்று ஆட்சியில் அமரும் என்று பல கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்து வருகின்றன.