This Article is From May 24, 2019

எது நடக்கக் கூடாது என நினைத்தோமோ, அது நடந்தது வேதனையளிக்கிறது: திருமா வருத்தம்

தமிழகம்போல் இன்றி பிற மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் சிதறி நின்றதால் வாக்குகளும் சிதறிவிட்டன. வாக்குகள் சிதறியது பாஜகவின் பெரும்பான்மைக்கு சாதகமாக அமைந்துவிட்டது. 

எது நடக்கக் கூடாது என நினைத்தோமோ, அது நடந்தது வேதனையளிக்கிறது: திருமா வருத்தம்

எது நடக்கக் கூடாது என நினைத்தோமோ, அது நடந்தது வேதனையளிக்கிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்கான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் திமுக கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சிதம்பரம் நாடாளுமன்றம் தொகுதியில் சுயேட்சை சின்னத்தில் போட்டியிட்டார்.

தொடர்ந்து, நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் திருமாவளவனுக்கும், அதிமுக வேட்பாளர் சந்திரசேகரனுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இதனால், நள்ளிரவு வரை இழுபறியாகவே வாக்கு எண்ணிக்கை நீண்டது. இதைத்தொடர்ந்து, நள்ளிரவுக்கு மேல் அவர் 3,219 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த திருமாவளவன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, 

விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளோம், வெற்றிக்கு பாடுப்பட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கும், தொண்டர்களுக்கும் மற்றும் இந்த கூட்டணிக்கு வெற்றியை வழங்கிய பொதுமக்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். 

மக்களவை தேர்தலில் மதசார்பற்ற கூட்டணிக்கு மகத்தான வெற்றியை மக்கள் தந்துள்ளனர். தமிழகம்போல் இன்றி பிற மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் சிதறி நின்றதால் வாக்குகளும் சிதறிவிட்டன. வாக்குகள் சிதறியது பாஜகவின் பெரும்பான்மைக்கு சாதகமாக அமைந்துவிட்டது. 

எது நடக்க கூடாது என நினைத்தோமோ அது நடந்தது வேதனையளிக்கிறது. ராகுல்காந்தி உள்ளிட்டோரை இந்துக்களுக்கு எதிரிபோல் காட்டி விட்டார்கள். நான் எந்த சமூகத்திற்கும் எதிரானவன் அல்ல, அரசியல் காரணங்களுக்காக என் மீது விமர்சனம் செய்தனர். தமிழகத்தில் சாதி, மத வெறியர்களுக்கு இடம் இல்லை என்பதை மக்கள் நிரூபித்து விட்டார்கள் என்று அவர் கூறினார். 

.