ஹைலைட்ஸ்
- ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து பாஜக எம்.பிக்களுடன் பிரதமர் ஆலோசனை.
- 45 எம்.பிக்களுடன் இன்று காலை பிரதமர் மோடி சந்திப்பு.
- ஆகாஷ் விஜயவர்கியாவின் நடத்தை மீது அதிருப்தி எழுந்ததாக கூறப்படுகிறது.
New Delhi: அரசு அதிகாரியை பொது இடத்தில் வைத்து கிரிக்கெட் மட்டையால் தாக்குதல் நடத்திய பாஜக எம்எல்ஏ., ஆகாஷ் விஜயவர்கியாவின் செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஒழுக்க பிரச்சினைகள் குறித்து பாஜக எம்.பிக்களுடன் பிரதமர் மோடி இன்று காலை தனது இல்லத்தில் வைத்து ஆலோசனை மேற்கொண்டார்.
டெல்லியில் உள்ள பிரதமர் வீட்டில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் 45 எம்.பிக்கள் பங்கேற்றனர். இதில், மத்திய பிரதேசத்தில் முதல் முறை எம்எல்ஏவான ஆகாஷ் விஜயவர்கியா மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்த பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் பாஜக தேசிய பொதுச்செயலாளர்களில் ஒருவரான கைலாஷ் விஜய்வர்கியாவும் பங்கேற்றார். அப்போது எந்த சம்பவத்தையும் குறிப்பிடாமல் பேசிய பிரதமர் மோடி, ‘யாராக இருந்தாலும், யாருடைய மகனாக இருந்தாலும் அராஜகத்தையும் ஒழுங்கீனத்தையும் ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது' என எச்சரித்தார்.
இதைப்போன்ற செயல்கள் கட்சிக்கு அவப்பெயரை உண்டாக்குவதால் ஏற்புடையதாக இருக்க முடியாது. யாராவது தவறு செய்தாலும் மன்னிப்பு கேட்கும் மனப்பக்குவமும் அவர்களுக்கு இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இந்தூரில் ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்த கட்டுமானத்தை அகற்றிய மாநகராட்சி அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்குதல் நடத்திய ஆகாஷின் செயல் ஏற்கத்தக்கதல்ல. அவர் யாருடைய மகன் என்பதை பற்றிய கவலை எனக்கில்லை. பொதுவெளியில் இது போன்ற அராஜகத்தை கட்சியின் பெயரால் அரங்கேற்றுவதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது. அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் ஆகாஷ் விஜய்வர்கியா சிறையில் இருந்து வெளிவந்த போது வானத்தை நோக்கி துப்பாகியால் சுட்டு ஆரவாரமான வரவேற்பை அளித்தவர்களும் கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.
கடந்த ஜூன் 26ம் தேதி இந்தூரில் உள்ள ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்த சட்டவிரோத கட்டுமானத்தை காவல்துறையினரின் துணையோடு மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். அப்போது அங்கு வந்த கைலாஷ் விஜய்வர்கியாவின் மகனும் பாஜக எம்.எல்.ஏவுமான ஆகாஷ், திரேந்திர சிங் பைஸ் என்ற அதிகாரியை கிரிக்கெட் மட்டையால் தாக்கினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்கள் மட்டுமல்லாது செய்தி தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பான நிலையில் ஆகாஷ் கைது செய்து பின்னர் பிணையில் வெளிவந்தார்.
ஆகாஷின் தந்தையான கைலாஷ் விஜய்வர்கியா பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் ஆவார். இரண்டு முறை எம்.எல்.ஏவாகவும், ஒரு முறை இந்தூரின் மேயராகவும் கைலாஷ் செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.