தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அனைத்தையும் மூட உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் காந்திராஜன் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், மதுபோதையால் விபத்து மற்றும் பல்வேறு நோய்களால் வருடந்தோறும் 2 லட்சம் பேர் பாதிக்கப்படுகிறார்கள்.
2016-ல் நடந்த சட்டசபை தேர்தலின் போது அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் 2020-ம் ஆண்டுக்குள் தமிழகத்தில் படிப்படியாக மதுக்கடைகள் முழுவதும் மூடப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தனர்.
ஆனால், 3 ஆண்டுகள் கடந்த நிலையில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அதிமுக அரசு தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தபடி 2020-ம் ஆண்டுக்குள் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அனைத்தையும் மூட உத்தரவிட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அதிமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியின்படி 2020-ம் ஆண்டுக்குள் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட, தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்று கேள்வி எழுப்பினர்.
மேலும் இது குறித்து தமிழக அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.