This Article is From Dec 04, 2019

Rajini - தமிழருவி மணியன் திடீர் சந்திப்பு - நடந்தது என்ன..?

"அடுத்த ஆண்டு அவர் நிச்சயம் கட்சித் தொடங்குவார் என்பது எனக்குத் தெரிந்த உண்மை”

Rajini - தமிழருவி மணியன் திடீர் சந்திப்பு - நடந்தது என்ன..?

"என்னளவில் தெரிந்த ஒரு உண்மை என்னவென்றால், அவரின் இந்தப் பிறந்தநாளைக்கு கட்சி ஆரம்பிப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை"

காந்திய மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த தமிழருவி மணியன், இன்று போயஸ் கார்டனில் இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth) இலத்துக்குச் சென்று, அவருடன் சுமார் 1 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இருவருக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் என்ன விவாதிக்கப்பட்டது என்பது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்தார் தமிழருவி மணியன். 

“இன்று ரஜினிகாந்த் அவர்களும் நானும் அரசியல் ரீதியாக எதையும் பேசிவிடவில்லை. தனிப்பட்ட முறையில் பல விஷயங்கள் குறித்து நாங்கள் கலந்துரையாடினோம். ஆனால், என்னளவில் தெரிந்த ஒரு உண்மை என்னவென்றால், அவரின் இந்தப் பிறந்தநாளைக்கு கட்சி ஆரம்பிப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. 

ஆனால், அடுத்த ஆண்டு அவர் நிச்சயம் கட்சித் தொடங்குவார் என்பது எனக்குத் தெரிந்த உண்மை,” என்றார் மணியன்.

உடனே ஒரு பத்திரிகையாளர், “ரஜினி - கமல் கூட்டணி அமைய வாய்ப்பிருப்பதாக பார்க்கப்படுகிறது. உங்கள் கருத்து..?,” என்று கேட்க, “கமல்ஹாசன், தமிழக அரசியல் களத்தில் ஏற்கெனவே ஒரு கட்சியை ஆரம்பித்து நடத்தி வருகிளார். ரஜினிகாந்த், விரைவில் அரசியல் கட்சி ஆரம்பிக்க உள்ளார். இருவரும் இணைந்து செயல்படுவது குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்கள். அவர்கள் இருவரும் தனிப்பட்ட முறையில் கூறியது பற்றி நான் எதுவும் சொல்ல வேண்டியதில்லை. ரஜினிதான் உங்களை இப்போதெல்லாம் அடிக்கடிப் பார்க்கிறாரே. அவரிடமே நீங்கள் இது குறித்து விளக்கமாக கேட்கலாம் அல்லவா,” என்றார். 

உள்ளாட்சித் தேர்தல் விவகாரம் குறித்து பேசிய தமிழருவி மணியன், “உள்ளாட்சித் தேர்தல் இப்போது நடக்கும் என்று நான் நினைக்கவில்லை. காரணம், 5 புதிய மாவட்டங்களைப் பிரித்துள்ளார்கள். இந்த மாவட்டங்களுக்கான மறுவரையறை செய்வது மிகப் பெரிய பணி. அதைச் செய்யாமலேயே தற்போது தேர்தல் நடத்தப்படும் என்று சொல்வது சரியானது அல்ல. மேலும், திமுக நீதிமன்றத்தில் இது தொடர்பாக தொடர்ந்துள்ள மனுவும் சாதாரணமாக முடியக் கூடியதில்லை,” என்று பதில் அளித்தார். 

.