விருதுநகர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட நபரின் ரத்தம் செலுத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன் வந்து இது குறித்து விசாரணை நடத்த உள்ளது.
கர்ப்பிணிப் பெண்ணுக்கு கடந்த 3-ம்தேதியன்று எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவரின் ரத்தம் செலுத்தப்பட்டிருக்கிறது. அப்போது தனக்கு செலுத்தப்பட்டது எச்.ஐ.வி. பாதிப்பு ரத்தம்தான் என அந்தப் பெண்ணுக்கு தெரியாது.
பின்னர் வெளிநாட்டு வேலைக்குச் செல்வதற்காக ரத்தம் கொடுத்த அந்த இளைஞர் சோதனை செய்த போதுதான் தெரியவந்தது, அவருக்கு எச்.ஐ.வி உள்ளது என்பது. இதைத்தொடர்ந்து அந்த கர்ப்பிணியின் ரத்தத்தை சோதனை செய்த போது அவருக்கும் எச்.ஐ.வி. பாசிட்டிவ் என தெரியவந்தது.
தற்போது பாதிக்கப்பட்ட பெண், மதுரை மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இன்று செய்தியாளர்களை சந்தித்த மருத்துவமனையின் பொறுப்பு டீன் சண்முகசுந்தரம்,
'கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்டது குறித்து ஆய்வு செய்ய சிறப்பு மருத்துவர்கள் குழு அமைத்திருக்கிறோம். முன்னரே விருதுநகரில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு செய்யப்பட்ட ஆய்வுகள் மீண்டும் இங்கு செய்யப்படும். விரிவான பரிசோதனைகள் செய்து அதற்குரிய மருத்துவம் செய்யப்படும்.
தற்போதைக்கு பாதிக்கப்பட்டப் பெண்ணுக்கு, 3 மருந்துகள் கலந்த ஒரு மாத்திரை கொடுத்து வருகிறோம். 30.1.2019 தேதிக்கு முன்னர் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்க்கிறோம். குழந்தைக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருக்கக் கூடாது என்பதற்காக, பிறந்தவுடன் 42 நாட்களுக்கு உரிய மருந்துகள் கொடுக்கப்போம். எச்.ஐ.வி பாதித்த பெண் பெற்றெடுக்கும் குழந்தையை, இது மாதிரியான மருந்து கொடுத்து பலமுறை நாங்கள் தொற்று ஏற்படாமல் காப்பாற்றியுள்ளோம். அதே முறையை இந்தப் பெண்ணுக்கும் நாங்கள் கடைபிடித்து குழந்தைக்கு எச்.ஐ.வி வராமல் பார்த்துக் கொள்வோம். பாதிப்பு வராமல் பார்த்துள் கொள்ள 99 சதவிகித வாய்ப்புள்ளது' என்று கூறியுள்ளார்.