This Article is From Jan 03, 2020

தேர்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்கிறோம்: ஓ.பன்னீர்செல்வம்

தற்போது வரை எண்ணப்பட்டுள்ள வாக்குகளில் ஒன்றிய கவுன்சிலர் தேர்தல் மற்றும் மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் அதிமுகவை விட திமுகவே முன்னிலையில் உள்ளது.

தேர்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்கிறோம்: ஓ.பன்னீர்செல்வம்

தேர்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்கிறோம்; ஓ.பி.எஸ்

உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்கிறோம் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று காலை தொடங்கியது. தொடர்ந்து, நேற்று இரவு விடிய விடிய வாக்கு எண்ணும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. தேர்தலின் வெற்றி, தோல்வி குறித்த அதிகாரப்பூர்வ முடிவுகள் இன்று மாலை தெரியவரும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த மாதம் 27 மற்றும் 30-ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர்,
கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 91 ஆயிரத்து 975 பதவிகளுக்கு இந்த தேர்தல் நடைபெற்றது.

மொத்தம் உள்ள 37 மாவட்டங்களில் 27 மாவட்டங்களுக்கு தேர்தல் நடந்தது. சென்னை மாவட்டம் சென்னை மாநகராட்சி பகுதியில் அமைந்து இருப்பதால் இங்கு தேர்தல் நடைபெறவில்லை.

முதல் கட்ட தேர்தலின் போது 76.19 சதவீதம் வாக்குகளும், 2-ம் கட்ட தேர்தலில் 77.73 சதவீதம் வாக்குகளும் பதிவாகி இருந்தன.  இந்த வாக்குப்பதிவின் போது வாக்குச்சீட்டுகளை மாற்றி வழங்கியது  உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகள்
நடைபெற்றன. 

மொத்தம் 515 மாவட்டக் கவுன்சிலர், 5090 ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. மீதம் உள்ள பதவிகள் பஞ்சாயத்து தேர்தலுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய நடைபெற்ற நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் எண்ணப்பட்டு வருகிறது. 

தற்போது வரை எண்ணப்பட்டுள்ள வாக்குகளில் ஒன்றிய கவுன்சிலர் தேர்தல் மற்றும் மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் அதிமுகவை விட திமுகவே முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து இன்று காலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. தேர்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும், அதிமுக சார்பாக மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார். 
 

.