கண்காணிக்கப்பட்டவர்களின் சரியான எண்களை கொடுக்க வாட்ஸ்அப் நிறுவனம் மறுத்துவிட்டது.
New Delhi: இந்தியாவில் உள்ள முக்கிய பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், மூத்த அரசு அதிகாரிகள் உள்ளிட்டவர்களின் போன்களுக்குள் வாட்ஸ் அப் மூலம் இஸ்ரோலிய ஸ்பைவேர் ஊடுருவியதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக பல்வேறு இந்தியர்களை தொடர்பு கொண்ட வாட்ஸ் அப் நிறுவனம், இஸ்ரேல் ஸ்பைவேர் சாஃப்ட்வேரால் நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள் என்ற தகவலை தெரிவித்ததாக என்டிடிவியிடம் உறுதிபட கூறியுள்ளது. இந்த இஸ்ரேல் ஸ்பைவேர் சாஃப்டவேர் மூலம் இந்தியாவில் உள்ள பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் போன்ற பலர் கண்காணிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
வாட்ஸ் அப்பின் தாய் நிறுவனமான பேஸ்புக் இஸ்ரேலிய சைபர் செக்யூரிட்டி நிறுவனமான என்எஸ்ஓ (NSO) மீது வழக்குத் தொடுத்தது. அதில், 20 நாடுகளில் உள்ள பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், மூத்த அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 1400 பயணர்களை கண்காணிக்க வாட்ஸ் அப் சர்வரை பயன்படுத்தியதாக குற்றம்சாட்டியுள்ளது.
இந்த ஸ்பைவேர் வாட்ஸ் அப் பயனர்களின் போன்களுக்குள் ஊடுருவி அவர்களின் அழைப்புகள், குறுஞ்செய்திகள், பாஸ்வேர்டுகள் உள்ளிட்ட தகவல்களை கண்காணிக்க வழிவகை செய்துள்ளன. எனினும், வாட்ஸ்அப் நிறுவனம் கண்காணிக்கப்பட்டவர்களின் சரியான எண்களை கொடுக்க மறுத்துவிட்டது. மேலும், கண்காணிக்கப்பட்ட ஒவ்வொருவரிடம் இது தொடர்பான தகவல்களை தெரிவித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் ஏறக்குறைய இரண்டு வாரங்கள் இந்தியாவில் உள்ள ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்களைப் பின்தொடர ஸ்பைவேர் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. முன்னதாக கடந்த மே மாதம் பேஸ்புக் நிறுவமனம் சைபர் தாக்குதலைக் கண்டறிந்து அதனைத் தடுத்து நிறுத்தியதாகவும் அறிவித்திருந்தது.
இந்த சைபர் தாக்குதலுக்கு பின்னால், ‘பெகாசூஸ்' (Pegasus) என்ற ஸ்பைவேர் சாஃப்ட்வேர் உள்ளதாகவும், அது பயனர்களுக்கு வரும் வீடியோ கால்களின் போது அவர்களின் மொபைல்களுக்குள் ஊடுருவுகிறது. இப்படி அழைப்பு வரும்போது அதனை பயனர்கள் அட்டன் செய்தவுடன் தானகவே போனில் ஸ்பைவேர் சாஃப்ட்வேர் இன்ஸ்டால் ஆகிறது. பயனர்கள் அழைப்பை ஏற்காத போதும் அந்த சாஃப்டவேர் தானாக இன்ஸ்டால் ஆவதாக கூறப்படுகிறது.
இப்படி பயனர்களின் செல்போனுக்குள் புகுந்த பின்னர், அவர்களின் அனைத்து அழைப்புகள், குறுஞ்செய்திகள், கேமராக்கள், கேலண்டர், பாஸ்வேர்டுகள் உள்ளிட்ட தகவல்களை கண்காணித்துள்ளது.
ஆனால் வாட்ஸ் அப் தெரிவித்துள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் இஸ்ரேலின் என்.எஸ்.ஓ நிறுவனம் திட்டமிட்டமாக மறுத்துள்ளது. தங்கள் கண்டுபிடிப்பான பெகாசூஸ் என்ற மென்பொருளை முறையாக அரசிடம் விற்றதாகக் கூறியுள்ளது. மேலும், எங்கள் தொழில்நுட்பம் மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக பயன்படுத்த வடிவமைக்கப்படவில்லை என்றும் அதற்காக உரிமம் பெறவில்லை என்றும் கூறியுள்ளது.