சர்வதேச அளவில் 20-க்கும் அதிகமான நாடுகளில் வாட்ஸ்ஆப் ஹேக் செய்யப்பட்டுள்ளது.
New Delhi: இந்தியாவில் சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் போன்றோரின் வாட்ஸ்ஆப் ஹேக் செய்யப்பட்டதாக எழுந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், பிரியங்கா காந்தியின் வாட்ஸ் ஆப் ஹேக் செய்யப்பட்டதாக காங்கிரஸ் கட்சி அதிர்ச்சி தகவலை தற்போது வெளியிட்டுள்ளது.
நேற்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது வாட்ஸ்ஆப் ஹேக் செய்யப்பட்டதாக கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரசின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மத்திய பிரதேசத்தின் பிரபுல் படேல் தனது வாட்ஸ்ஆப் ஹேக் செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் பிரியங்கா காந்தியின் வாட்ஸ்ஆப் ஹேக் செய்யப்பட்டதாக அவரது பிரசார குழுவினர் தெரிவித்துள்ளனர்.
வாட்ஸ்ஆப் ஹேக் செய்யப்பட்டது குறித்து முதலில் பிரியங்கா காந்தியின் சமூக வலைதள பிரசாரக்குழு கண்டு கொள்ளவில்லையாம். பின்னர் செய்தி தொடர்பாளர் சுர்ஜிவாலா பிரியங்காவின் மெசேஜை ஷேர் செய்துள்ளார். அந்த மெசேஜ் பிரியங்காவின் வாட்ஸ்ஆப்புக்கு வரவேயில்லையாம். இதையடுத்து ஹேக் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அடுத்தடுத்து அரசியல் தலைவர்கள் ஹேக் செய்யப்பட்டது குறித்த விவரங்களை வெளியிட்டு வருகின்றனர்.
கடந்த வாரம்தான் இந்த ஹேக்கிங் விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இஸ்ரேலை சேர்ந்த இணைய தள பாதுகாப்பு நிறுவனம், வாட்ஸ்ஆப்பின் சர்வரில் பெகாசஸ் எனும் உளவுமென் பொருளை பரப்பியதாகவும், அதன் விளைவாக கடந்த மே மற்றும் செப்டம்பர் மாதங்களில் குறிப்பிட்ட சில நபர்களின் வாட்ஸ்ஆப் ஹேக் செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
அவர்கள் அமெரிக்காவுக்கு ஆதரவாக இருக்கும் 20 நாடுகளை சேர்ந்தவர்கள் என்ற விவரமும் வெளியானது. இதன் தொடர்ச்சியாக மத்திய அரசு வாட்ஸ்ஆப் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது.