இந்தியாவில் மட்டும் வாட்ஸ்ஆப்பை 40 கோடிபேர் பயன்படுத்துகின்றனர்.
New Delhi: 121 இந்தியர்களின் வாட்ஸ்ஆப் உளவு பார்க்கப்பட்டது குறித்து இந்திய அதிகாரிகளிடம் வாட்ஸ்ஆப் நிறுவனம் எச்சரிக்கை செய்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. செப்டம்பர் மாதத்தின்போது இந்த எச்சரிக்கை செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பாக மே மாதம் உளவு பார்ப்பது குறித்து மத்திய அரசிடம் அறிவுறுத்தியதாக வாட்ஸ்ஆப் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்களில் 99 சதவீதத்திற்கும் அதிகமானோர் பயன்படுத்தப்படும் வாட்ஸ்ஆப் செயலி, இந்தியாவில் ஹேக் செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக மத்திய அரசின் உயர் அதிகாரிகள், ராணுவ தலைமை தளபதிகள் உள்ளிட்டோரின் வாட்ஸ்ஆப் உளவு பார்க்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் முக்கிய ஆவணங்கள், ராணுவம் சம்பந்தமான தகவல்கள் திருடப்பட்டிருக்கலாம் என்ற தகவலும் பரவி வருகிறது. இந்திய பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் சிலர் தங்களது வாட்ஸ்ஆப் உளவு பார்க்கப்பட்டதாக கூறி, இந்த விவகாரத்தை தேசிய அளவில் எழுப்பினர். இதன் தொடர்ச்சியாக கடந்த வியாழன் அன்று வாட்ஸ்ஆப் நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உளவு பார்க்கப்பட்டது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு வலியுறுத்தியது.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ‘வாட்ஸ்ஆப் மூலம் இந்தியர்களின் தகவல்கள் திருடப்பட்டிருப்பதாக எழுந்திருக்கும் விவகாரத்தை மத்திய அரசு மிக முக்கியமானதாக பார்க்கிறது. இதுதொடர்பாக விளக்கம் அளிக்க வாட்ஸ்ஆப் நிறுவனத்தை வலியுறுத்தியுள்ளோம். கோடிக்கணக்கான இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பது என்பது இந்தியர்களின் கடமை.' என்று கூறினார்.
வாட்ஸ்ஆப் ஹேக்கிங் என்பது இந்தியாவில் மட்டுமல்லாமல் பல வெளிநாடுகளிலும் நடந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலை சேர்ந்த சைபர் நிறுவனமான பெகாசஸ்தான் இந்த ஹேக்கிங்கிற்கு முக்கிய காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
ஹேக் செய்யப்பட்டது எப்படி?
வாட்ஸ்ஆப் மூலம் வீடியோ கால் செய்வது பரவலாக நடைமுறையில் இருக்கிறது. அவ்வாறு வீடியோ கால் ஒருவருக்கு வரும்போது ஹேக்கர்கள் வைரஸ் மென்பொருட்களை வீடியோ கால்வழியே அனுப்பி விடுகின்றனர். இதற்கு வீடியோ காலை அட்டென்ட் செய்யத் தேவையில்லை. ரிங் அடித்தாலே Malicious தீங்கு விளைவிக்கும் மென்பொருள் மொபைலில் இன்ஸ்டால் ஆகி விடும். இதன் பின்னர் அந்த மொபைலில் உள்ள வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பப்படும் பெறப்படும் தகவல்கள் திருடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அத்துடன், வழக்கமாக செய்யும் வாய்ஸ் கால்கள், பாஸ்வேர்டுகள், Contacts, கேமரா உள்ளிட்டவையும் ஹேக் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.