This Article is From Nov 01, 2019

பாக்கெட்டிலே உடனிருந்த உளவாளி! - வாட்ஸ் அப் வடிவில் இந்தியர்களுக்கு வந்த ஆபத்து!

மனித உரிமைகள் வழக்கறிஞர் நிகால் சிங் ரத்தோட், சத்தீஸ்கரை சேர்ந்த ஆர்வலர் பேலா பாத்தியா, வழக்கறிஞர் பிரசாத் செளகான், பத்திரிகையாளர் சித்தாந்த் சிபால், எழுத்தாளர்-ஆர்வலர் ஆனந்த் தெல்தும்டே ஆகியோர் ஒரு சிலர் ஆவார்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

பாக்கெட்டிலே உடனிருந்த உளவாளி! - வாட்ஸ் அப் வடிவில் இந்தியர்களுக்கு வந்த ஆபத்து!

ஆர்வலர்கள் கடந்த ஏப்ரல் மாதத்தில் இரண்டு வாரங்களாக கண்காணிக்கப்பட்டுள்ளனர் (Representational)

New Delhi:

பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், பீமா கோரேகான் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆர்வலர்களின் வழக்கறிஞர்கள் உள்ளிட்டவர்கள் இந்தியாவில் வாட்ஸ் அப் வழியாக இஸ்ரேலி ஸ்பைவேர் மூலம் கண்காணிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும் கடந்த ஏப்ரல் மாதத்தில் இரண்டு வாரங்களாக கண்காணிக்கப்பட்டுள்ளனர் என்பது தற்போது தெரியவந்துள்ளது. 

அதில் மனித உரிமைகள் வழக்கறிஞர் நிகால் சிங் ரத்தோட், சத்தீஸ்கரை சேர்ந்த ஆர்வலர் பேலா பாத்தியா, வழக்கறிஞர் பிரசாத் செளகான், பத்திரிகையாளர் சித்தாந்த் சிபால், எழுத்தாளர்-ஆர்வலர் ஆனந்த் தெல்தும்டே ஆகியோர் ஒரு சிலர் ஆவார்கள். 

இதுதொடர்பாக என்டிடிவியிடம் பேசிய நிகால் சிங் மற்றும் பேலா பாத்தியா ஆகியோர் கூறும்போது, டொராண்டோ பல்கலைக்கழகத்தை சார்ந்த சிட்டிசன் ஆய்வு நிறுவனம் தங்களை தொடர்பு கொண்டதாகவும், அவர்கள் வாட்ஸ் அப்பால் உளவு பார்க்கப்பட்டவர்கள் பட்டியலில் எனது பெயரும் இடம்பெற்றிருப்பதாக தெரிவித்தனர். மேலும், இது மிகவும் அதிநவீன ஸ்பைவேர் என்றும் அதனால், உங்கள் தொலைபேசியிலிருந்து அனைத்து தகவல்களையும் எடுக்க முடியும் என்று பேலா பாட்டியா தெரிவித்துள்ளார். 

இது ஒரு உளவாளியை பாக்கெட்டிலே சுமப்பது போல் இருந்தது. அதனால், நாம் ஒர் அறையில் பேசும் அனைத்து உரையாடல்களையும் கண்காணிக்க முடியும். மேலும், என்னை தொடர்பு கொண்டவர்கள் அந்த ஸ்பைவேர் வழக்கறிஞர்கள் மற்றும் ஆர்வலர்களை குறிவைத்தை செயல்பட்டு வந்ததாக தெரிவித்தனர் என்றார். மேலும், செவ்வாய்க்கிழமை அன்றே வாட்ஸ் அப் நிறுவனத்திடம் இருந்து தனக்கு தகவல்கள் வந்ததாகவும் கூறியுள்ளார். ரத்தோட் கூறும்போது, பீமா கோரேகான் வழக்கில் தொடர்புடையவர்கள் மட்டுமே ஸ்பைவேர் மூலம் கண்காணிக்கப்பட்டுள்ளனர். நிச்சயம் இதற்கு பின்னால் நமது அரசும் செயல்பட்டிருக்கும் என குற்றம்சாட்டினார். 

ஸ்பைவேரால் உங்கள் போனில் முழுமையாக ஊடுருவ முடியும். அதனால், வெளியே உள்ள தகவல்களை எனது ஆவணங்களுடன் சேர்க்க முடியும். இதன் மூலம் எனது கிளைண்ட்களை தண்டிக்கும் வகையில் ஆவணங்களை பெகாசூஸ் ஸ்பைவேர் மூலம் சேர்த்துள்ளனர் என்று ரத்தோட் கூறினார். மேலும், அவர் கூறும்போது என்னால், எனது குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியவில்லை என்றார். 

இந்த சைபர் தாக்குதலுக்கு பின்னால், ‘பெகாசூஸ்' (Pegasus) என்ற ஸ்பைவேர் சாஃப்ட்வேர் உள்ளதாகவும், அது பயனர்களுக்கு வரும் வீடியோ கால்களின் போது அவர்களின் மொபைல்களுக்குள் ஊடுருவுகிறது. இப்படி அழைப்பு வரும்போது அதனை பயனர்கள் அட்டன் செய்தவுடன் தானகவே போனில் ஸ்பைவேர் சாஃப்ட்வேர் இன்ஸ்டால் ஆகிறது. பயனர்கள் அழைப்பை ஏற்காத போதும் அந்த சாஃப்டவேர் தானாக இன்ஸ்டால் ஆவதாக கூறப்படுகிறது. 

இப்படி பயனர்களின் செல்போனுக்குள் ஊடுருவிய பின்னர், அவர்களின் அனைத்து அழைப்புகள், குறுஞ்செய்திகள், கேமராக்கள், கேலண்டர், பாஸ்வேர்டுகள் உள்ளிட்ட தகவல்களை கண்காணித்துள்ளது. மேலும், அதனால் பயனர்களின் கேமராக்கள் மற்றும் மைக்குகளை ஆன் செய்து அவர்கள் என்ன செய்கிறார்கள் அவர்களை சுற்றி என்ன நடக்கிறது என்பதையும் உளவு பார்க்க முடியும். 

இதுதொடர்பாக உள்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறும்போது, அரசுக்கும் இந்த வாட்ஸ் அப் உளவு குற்றச்சாட்டுகளுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. வாட்ஸ்அப் என்ற குறுஞ்செய்தி பரிமாற்றும் செயலி மூலம் இந்திய குடிமக்களின் தனியுரிமை மீறப்படுகிறது என்பது குறித்து இந்திய அரசு கவலை கொண்டுள்ளது. 

கோடிக்கணக்கான இந்திய குடிமக்களின் தனியுரிமையைப் பாதுகாக்க என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை விளக்குமாறு வாட்ஸ் அப்பிற்கு நாங்கள் கேள்வி எழுப்பியுள்ளோம் என்று அவர் கூறினார்.

.