வாட்ஸ்அப்பில் வைரலாக பரவிவரும் ஒரு ஃபார்வர்டு மெஸேஜில், 3 நீல டிக்ஸ் இருந்தால் அரசு ஒரு குறிப்பிட்ட மெஸேஜைப் பார்த்துவிட்டது என்று பொருள் என்று சொல்லப்படுகிறது.
ஹைலைட்ஸ்
- வாட்ஸ்அப்பில் புதிய அப்டேட் செய்யப்பட்டுள்ளதாக வதந்தி பரப்பப்பட்டுள்ளது
- இந்த தகவலை போலி என்று அரசே உறுதி செய்துவிட்டது
- வதந்திகளுக்கு எதிராக தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது அரசு
New Delhi: கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ள நிலையில், சமூக வலைத்தளங்கள் மூலமாக பல செய்திகள் வேகமாக பரவி வருகின்றன. அதே நேரத்தில் சில வதந்திகளும் செய்திகளுக்கு இணையாக வைரலாகி விடுகின்றன.
சமீபத்தில் WhatsApp செயலி குறித்த ஒரு ஃபார்வர்டு மெஸேஜ், பரவலான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த மெஸேஜில் வரும் தகவல்படி அரசு, ஒருவருக்கு வரும் அனைத்து வாட்ஸ்அப் மெஸேஜ்களையும் பார்த்துக் கொண்டிருப்பதாகவும், தவறான மெஸேஜ் அனுப்பப்பட்டாலோ பகிர்ந்தாலோ அது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க உள்ளதா என்பதும் தெரிவிக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்படுகிறது.
வாட்ஸ்அப் பயன்படுத்தும் பெரும்பான்மையானோர் தாங்கள் அனுப்பும் அல்லது பெறும் மெஸேஜ்களுக்குப் பக்கத்தில் வரும் ‘டிக்' பற்றி அறிந்திருப்பார்கள். கிரே வண்ணத்தில் டிக் இருந்தால் மெஸேஜ் அனுப்பப்பட்டது என்று பொருள், கிரே வண்ணத்தில் இரண்டு டிக்ஸ் இருந்தால் மெஸேஜ் டெலிவரி செய்யப்பட்டது என்று அர்த்தம். நீல வண்ணத்தில் இரண்டு டிக்ஸ் இருந்தால் மெஸேஜ் படிக்கப்பட்டுவிட்டது என்று பொருள்.
ஆனால், வாட்ஸ்அப்பில் வைரலாக பரவிவரும் ஒரு ஃபார்வர்டு மெஸேஜில், 3 நீல டிக்ஸ் இருந்தால் அரசு ஒரு குறிப்பிட்ட மெஸேஜைப் பார்த்துவிட்டது என்று பொருள் என்று சொல்லப்படுகிறது.
அதேபோல 2 நீல டிக்ஸ் மற்றும் ஒரு சிவப்பு டிக் இருந்தால், அரசு உங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது. மேலும், 1 நீலம் மற்றும் 2 சிவப்பு டிக்ஸ் இருந்தால் உங்கள் மெஸேஜை அரசு சோதனை செய்து வருகிறது என்று பொருளாம். கடைசியாக, 3 சிவப்பு டிக்ஸ் இருந்தால், அரசு உங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துவிட்டது என்று அர்த்தமாம். அதற்கான சம்மன் விரைவில் உங்களைத் தேடி வரும் என்றும் அந்த ஃபார்வர்டு மெஸேஜில் சொல்லப்படுகிறது.
இது முற்றிலும் தவறான போலியான ஒரு ஃபார்வர்டு மெஸேஜ்.
இது குறித்து, மத்திய அரசே விளக்கம் கொடுத்து ட்விட்டர் தளத்தில் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸால் நாடே தத்தளித்து வரும் சூழலில், பரப்பப்பட்டு வரும் போலி தகவல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசு முயன்று வருகிறது.
தற்போது ஊரடங்கு காலம் என்பதால் பலரும் தங்கள் வீடுகளில்தான் முடங்கியுள்ளனர். இதனால் சமீப காலமாக வாட்ஸ்அப்பின் பயன்பாடு பன்மடங்கு அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக போலி தகவல்கள், வதந்திகள் பரப்பப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக வாட்ஸ்அப் நிறுவனம், ஒரு ஃபார்வர்டு மெஸேஜை ஒரு சமயத்தில் ஒரேயொருவருக்கு மட்டும்தான் அனுப்பும் வகையில் மாற்றம் செய்துள்ளது.