இந்த உரிமை மீறலுக்கு அரசே காரணம் என அந்த பட்டியலில் உள்ள இரண்டு ஆர்வலர்களாவது குற்றம்சாட்டியுள்ளனர். (File)
New Delhi: இஸ்ரேயில ஸ்பைவேர்களால் கண்காணிக்கப்பட்ட இந்திய பயனர்களின் தனி உரிமை மீறல் குறித்து வாட்ஸ்அப் நிறுவனம் விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. மேலும், உரிமை மீறல் விவகாரத்தின் மூலம் அரசை இழிவுப்படுத்தும் முயற்சிகள் முற்றிலும் தவறானது என்றும், சட்டத்தை மீறிய குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு உறுதி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனி உரிமை உட்பட இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க இந்திய அரசு கடமைப்பட்டுள்ளது. சட்டத்தின் விதிகளின்படி அரசாங்கம் கண்டிப்பாக செயல்படுகிறது. எந்த அப்பாவி குடிமகனும் துன்புறுத்தப்படுவதில்லை அல்லது அவரது தனியுரிமை மீறப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்த போதுமான பாதுகாப்புகள் உள்ளன, "என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த உரிமை மீறலுக்கு அரசே காரணம் என அந்த பட்டியலில் உள்ள இரண்டு ஆர்வலர்களாவது குற்றம்சாட்டியுள்ளனர். இதனை அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இதுதொடர்பாக உள்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறும்போது, அரசுக்கும் இந்த வாட்ஸ் அப் உளவு குற்றச்சாட்டுகளுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. வாட்ஸ்அப் என்ற குறுஞ்செய்தி பரிமாற்றும் செயலி மூலம் இந்திய குடிமக்களின் தனியுரிமை மீறப்படுகிறது என்பது குறித்து இந்திய அரசு கவலை கொண்டுள்ளது.
கோடிக்கணக்கான இந்திய குடிமக்களின் தனியுரிமையைப் பாதுகாக்க என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை விளக்குமாறு வாட்ஸ் அப்பிற்கு நாங்கள் கேள்வி எழுப்பியுள்ளோம் என்று அவர் கூறினார்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் ஏறக்குறைய இரண்டு வாரங்கள் இந்தியாவில் உள்ள ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்களைப் பின்தொடர ஸ்பைவேர் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. முன்னதாக கடந்த மே மாதம் பேஸ்புக் நிறுவமனம் சைபர் தாக்குதலைக் கண்டறிந்து அதனைத் தடுத்து நிறுத்தியதாகவும் அறிவித்திருந்தது.
இந்த சைபர் தாக்குதலுக்கு பின்னால், ‘பெகாசூஸ்' (Pegasus) என்ற ஸ்பைவேர் சாஃப்ட்வேர் உள்ளதாகவும், அது பயனர்களுக்கு வரும் வீடியோ கால்களின் போது அவர்களின் மொபைல்களுக்குள் ஊடுருவுகிறது. இப்படி அழைப்பு வரும்போது அதனை பயனர்கள் அட்டன் செய்தவுடன் தானகவே போனில் ஸ்பைவேர் சாஃப்ட்வேர் இன்ஸ்டால் ஆகிறது. பயனர்கள் அழைப்பை ஏற்காத போதும் அந்த சாஃப்டவேர் தானாக இன்ஸ்டால் ஆவதாக கூறப்படுகிறது.
இப்படி பயனர்களின் செல்போனுக்குள் ஊடுருவிய பின்னர், அவர்களின் அனைத்து அழைப்புகள், குறுஞ்செய்திகள், கேமராக்கள், கேலண்டர், பாஸ்வேர்டுகள் உள்ளிட்ட தகவல்களை கண்காணித்துள்ளது. மேலும், அதனால் பயனர்களின் கேமராக்கள் மற்றும் மைக்குகளை ஆன் செய்து அவர்கள் என்ன செய்கிறார்கள் அவர்களை சுற்றி என்ன நடக்கிறது என்பதையும் உளவு பார்க்க முடியும்.
ஆனால் வாட்ஸ் அப் தெரிவித்துள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் இஸ்ரேலின் என்.எஸ்.ஓ நிறுவனம் திட்டமிட்டமாக மறுத்துள்ளது.