ஃபார்வர்டு மெசேஜ் பரப்புவதை கட்டுக்குள் வைக்க வாட்ஸ் அப் முடிவு செய்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் வன்முறை சம்பவங்களுக்கும், அப்பாவி மக்கள் அடித்து கொலை செய்யப்படுவதற்கும் வாட்ஸ் அப்பில் வரும் பொய் தகவல்கள் தான் காரணம் என மத்திய தகவல் தொடர்பு துறை தெரிவித்திருந்தது.
200 மில்லியனுக்கும் அதிகமானோர் இந்தியாவில் வாட்ஸ் அப்பை பயன்படுத்துகின்றனர். இதனால் பொய் தகவல்கள் பரப்புவதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு மத்திய அரசு கடிதம் எழுதியது.
வாட்ஸ் அப்பில் பொய் தகவல்கள் பரப்புவதை தடுக்க, மத்திய அரசும் பொது மக்களும் உதவ வேண்டும் என்று வாட்ஸ் அப் தரப்பில் கோரிக்கை வைக்கப் பட்டுள்ளது. மேலும், பொது மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, போலி செய்திகள் பற்றிய தீவிர விழிப்புணர்வு திட்டங்களை செயல்படுத்தவும் முடிவு செய்துள்ளது.
உலகிலேயே, இந்தியாவில் தான் அதிக ஃபார்வர்டு குறுஞ்செய்திகள் பகிரப்படுகிறது என்று வாட்ஸ் அப் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்த வாட்ஸ் அப் நிறுவனம், இனிமேல் ஐந்து சாட்களுக்கு மேல் ஒருவரால் ஃபார்வர்டு மெசேஜ் அனுப்ப முடியாதபடி புதிய கட்டுப்பாடுகளுடன் வாட்ஸ் அப் பயன்பாட்டை சோதனை செய்ய திட்டமிட்டிருக்கிறது. இதன் மூலம், பொய் செய்திகள் அதிகம் பரப்புவதை தடுக்க முடியும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. முன்பு எப்போதையும் விட இந்த ஆண்டு, குழந்தை கடத்தல் வதந்தியால், நாட்டின் பல்வேறு இடங்களில் அப்பாவி மக்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)