தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளிகல்வித்துறை விளக்கம்!
தமிழகத்தில் அக்.2வது வாரத்திற்குள் பள்ளிகள் திறக்கப்படுமா என்பது குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், தமிழகத்தில் கடந்த மார்ச் மாத இடையே பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. தொடர்ந்து, அம்மாத இறுதியில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக மாணவர்களுக்கு நடக்க வேண்டிய இறுதி ஆண்டு தேர்வுகள் நடத்த முடியாமல் போனது.
தொடர்ந்து, அடுத்தடுத்த மாதங்களாக பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. கிட்டதட்ட 5 மாதம் நிறைவுற்ற நிலையிலும் நாட்டில் ஊரடங்கு முழுமையாக ரத்து செய்யப்படவில்லை. அதேபோல், கொரோனா பாதிப்பும் குறையவில்லை. மாறாக நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. உலகளவில் கொரோனா பாதிப்பு அதிமுகள்ள நாடுகளின் வரிசையில் அமெரிக்கா, பிரேசிலை தொடர்ந்து இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
இதேபோல், நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் மகாராஷ்டிராவை அடுத்து, இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளது. இதனால், மாநிலத்தில் பொதுபோக்குவரத்து முடங்கிய நிலையிலே உள்ளது. அதேபோல், பள்ளிகள், கல்லூரிகளும் திறக்கப்படவில்லை. தொடர்ந்து, அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள் என பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடந்து வருகின்றன.
இதனிடையே, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வை அரசு ரத்து செய்தது. தொடர்ந்து, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களுக்கு இறுதி மதிப்பெண் வழங்கப்பட்டது.
இந்நிலையில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சி அளித்தது போல தனி தேர்வர்களுக்கும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. அதில், 11ஆம் வகுப்புகள், மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்றும் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, பள்ளிக்கல்வித்துறை சார்பில் தனித் தேர்வர்களுக்கான பத்தாம் வகுப்பு தேர்வு செப்டம்பர் மாத இறுதியில் நடைபெற இருப்பதாகவும், அதற்கான முடிவுகள் அக்டோபர் முதல் அல்லது இரண்டாவது வாரம் வெளியிடப்படும். அதற்குள் கொரோனா காரணமாக தமிழகம் முழுவதும் மூடப்பட்ட பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுமா என்பது குறித்து முடிவு செய்யப்படவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், தனித்தேர்வர்களை தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க கோரிய மனுவை ஏற்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. .
இதைத்தொடர்ந்து, நீதிபதிகள் கூறும்போது, பள்ளிகளில் படித்த பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு மற்றும் வருகைப்பதிவின் அடிப்படையில் தான் தேர்ச்சி பெற செய்திருக்கிறார்கள். அதேபோல், தனித்தேர்வர்களை அனுமதிக்க முடியாது என்ற பள்ளிக்கல்வித்துறை விளக்கத்தை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த நீதிபதிகள் வழக்கையும் முடித்து வைத்துள்ளனர்.