New Delhi: முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று காலமானார். இன்று மாலை அவரின் இறுதிச் சடங்கு டெல்லியில் நடக்கிறது. இந்நிலையில், அவர் நாட்டின் பிரதமராக பதவியேற்பதற்கு முன்னர், ஒரு முறை அழுதுள்ளார். அது எதற்காக என்று முன்னாள் பத்திரிகையாளரும் தற்போதைய காங்கிரஸ் உறுப்பினருமான ராஜிவ் சுக்லா பகிர்ந்துள்ளார்.
சிறுநீரக தொற்று காரணமாக கடந்த 9 வாரங்களாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாஜ்பாயின் உடல் நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் பின்னடைவு ஏற்பட்டது. இதையடுத்து நேற்று காலை எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை 5:05 மணிக்கு, சிகிச்சை பலனின்றி அவர் காலமானதாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்தது. இதையடுத்து, இந்திய அளவில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று டெல்லியில் முழு அரசு மரியாதையுடன் அவரது இறுதிச் சடங்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வாஜ்பாயை தான் பத்திரிகையாளராக இருந்தபோது நேர்காணல் செய்துள்ளார் சுக்லா. இது குறித்து சுக்லா, ‘வாஜ்பாய், 1996 ஆம் ஆண்டு, பிரமராக பதவியேற்பதற்கு முன்னர் நான் அவரை நேர்காணல் செய்தேன். அப்போது, ‘அடல்ஜி, நாளையிலிருந்து நீங்கள் பிரதமராக இருப்பீர்கள். உங்களுக்கு ஒரு பெரும் பாதுகாப்பு கொடுக்கப்படும். நீங்கள் பொது மக்களை ஒரு தூரத்திலிருந்துதான் பார்க்க முடியும்.’ என்றேன். அதற்கு அவர் அழ ஆரம்பித்துவிட்டார்’ என்று கூறினார்.
சுக்லா மேலும், ‘வாஜ்பாயின் அரசியல் என்பது அனைவரை அரவணைக்கும் ஒன்று. அவர் மாறுபட்ட கொள்கையைக் கொண்டிருந்தாலும், அவர் அனைவரையும் ஒன்றாக அழைத்துச் செல்ல நினைப்பார். எதிர்கட்சியினரும் அவரிடம் சகஜமாக பழக முடிந்தது. யார் மீதும் அவர் வெறுப்புடன் நடந்து கொள்ளமாட்டார். அதனால்தான் அவரை அனைவருக்கும் பிடித்திருந்தது. இன்றைய அரசியல் தலைவர்கள் அவரிடமிருந்து அந்தப் பண்பை கற்றுக் கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.