தீபாவளி தினத்தன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் பட்டாசுகளுக்குத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் தீபாவளியின் போது இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரை 2 மணி நேரமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த அவகாசத்தை தளர்த்தக் கோரி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன் தமிழக அரசு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், பட்டாசு வெடிக்க விதித்த கட்டுப்பாட்டால் பட்டாசு வெடிக்கும் உரிமையை தமிழக மக்கள் இழந்துள்ளனர். எனவே, தீபாவளியின்போது, அதிகாலை 4.30 மணி முதல் காலை 6.30 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் ஒதுக்கி அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
இதையடுத்து, தமிழகம், புதுச்சேரி மற்றும் தென் மாநிலங்களில் தீபாவளி நாளில் 2 மணி நேரம் பட்டாசு வெடிக்கலாம். பட்டாசு வெடிக்கப்படும் நேரத்தை தென் மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் பட்டாசு வெடிக்கும் நேரத்தை தமிழக அரசு தெரிவித்துள்ளது. தீபாவளி தினத்தன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.