டி.என்.சேஷன் மறைவுக்கு ராகுல் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். (File photo)
New Delhi:
தேர்தல் ஆணையர்கள் தைரியமிக்கவர்களாக செயல்பட்ட காலம் அது என டி.என்.சேஷனுக்கு ராகுல் புகழஞ்சலி செலுத்தியுள்ளளார்.
1955ம் ஆண்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டி.என்.சேஷன், 1990ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பணியாற்றி உள்ளார். இந்தியாவின் 10வது தலைமை தேர்தல் அதிகாரியாக பதவி வகித்த அவர், அரசியல்வாதிகளை கட்டுக்குள் வைத்திருக்க தேர்தல் அமைப்பில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
தேர்தல் நடைமுறையை மிகவும் வெளிப்படையானதாக மாற்றுவதில் அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காக ஆசியாவின் நோபல் என்று கருதப்படும் மதிப்புமிக்க ரமோன் மகசேசே விருதை பெற்றார். சேஷன் இந்தியாவின் தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்படுவதற்கு முன்பு, பிரதமர் ராஜீவ் காந்தியால் அமைச்சரவை செயலாளராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றிரவு அவர் காலமானார். இதைத்தொடர்ந்து, அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் அஞ்சலி தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்வீட்டர் பதிவில் கூறியதாவது, இன்றுபோல் அல்லாமல் தேர்தல் ஆணையர்கள் பாகுபாடு இல்லாமல், மரியாதைக்குரியவர்களாக, தைரியமிக்கவர்களாக, பயமற்றவர்களாக செயல்பட்ட காலம் இருந்தது. அவர்களில் ஒருவர் தான் டி.என்.சேஷன். அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.