மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்ற தெலங்கானா அரசு தவறி விட்டதாக ஸ்மிருதி இரானி குற்றம்சாட்டியுள்ளார்.
Hyderabad: தேர்தல் வந்துவிட்டால் ராகுல் காந்தி சிவபக்தராக மாறி விடுவார் என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி கிண்டல் செய்துள்ளார்.
தெலங்கானா தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுகிறது. இதையொட்டி மத்திய அமைச்சர்கள், பிரதமர் மோடி உள்ளிட்டோர் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ராமகுண்டம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், ''மதத்தின் பெயரால் எத்தனை நாளைக்கு மக்களை காங்கிரஸ் கட்சி பிரிக்கப்போகிறது?. ராமர் இல்லை என்று நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்திருக்கிறது. தேர்தல் வந்துவிட்டால் போதும்; ராகுல் காந்தி சிவ பக்தராக மாறி விடுவார்.
தெலங்கானாவில் வளர்ச்சிப் பணிகளை மத்தியில் ஆளும் மோடி அரசு செய்து வருகிறது. ஆனால் மத்திய அரசின் நலத்திட்டங்களை முதல்வர் சந்திரசேகர ராவ் சரியாக நிறைவேற்றவில்லை." என்று பேசினார்.
நிஜாமாபாத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஸ்மிருதி ராணி, பாஜகவுக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்தால் 7ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும் என்றும், மாணவிகள் பைக் வாங்குவதற்கு 50 சதவீத மானியம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.