"பாஜக-வை எல்லோரும் வெறுத்து ஒதுக்கியபோது தே.ஜ.கூ-வில் நாங்கள் இருந்தோம்"
ஹைலைட்ஸ்
- Shiv Sena, தனது நாளிதழ் மூலம் பாஜக-வை விமர்சித்துள்ளது
- Shiv Sena-வுக்கு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளத
- சிவசேனாவின் அமைச்சர், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்
New Delhi: மகாராஷ்டிராவில் பாஜக-வுடனான கூட்டணியிலிருந்து வெளியேறியுள்ள சிவசேனா (Shiv Sena), தொடர்ந்து பல்வேறு காரணங்களைப் பட்டியலிட்டு பிஜேபி-ஐ (BJP) விமர்சித்து வருகிறது. இந்நிலையில் சிவசேனாவின் அதிகாரபூர்வ நாளிதழான ‘சாம்னா'-வில் (Saamna), பாஜக-வின் சமீபத்திய நடவடிக்கைகள் குறித்து கறார் விமர்சனங்களை முன்வைத்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக் கிழமை, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரலாகத் ஜோஷி, சிவசேனா எம்.பி-க்களுக்கு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி பக்கம் இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்று கூறினார். சமீபத்தில் கூட்டணி முறிவை எடுத்துரைக்கும் நோக்கில் மத்திய அமைச்சரவையில் இருந்த சிவசேனா எம்.பி., தனது பதவியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
“சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் மகாராஷ்டிராவில் கூட்டணி வைத்து ஆட்சியமைக்க முயற்சி எடுத்து வரும் நிலையில், பாஜக-வின் ஜோஷி, தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து சிவசேனா நீக்கத்தை தெரிவித்துள்ளார். பாஜக-வில் இந்த முடிவு எடுத்தவர்களுக்கு சிவசேனா எந்த மாதிரியான பணிகளைச் செய்துள்ளன என்பது குறித்து தெரிந்திருக்காது.
பாஜக முதன் முதலில் தோன்றியபோது, ஒரு கட்சியும் அதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணி உருவாக்கப்பட்ட போது, தற்போது மத்திய அரசில் பதவி வகிக்கும் பலருக்கு எந்தப் பொறுப்பும் ஒதுக்கப்படவில்லை. சிலர் பிறந்திருக்கவில்லை. பாஜக-வுடன் யாரும் இணைய மறுத்தபோது, நாங்கள் தே.ஜ.கூ-வில் கை கோர்த்தோம். இந்துத்துவா என்கிற வார்த்தை பலரால் வெறுக்கப்பட்ட போது, பாஜக-வுடன் நாங்கள் துணை நின்றோம்.
சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி இறுதியாகும் நிலையில் இருக்கின்றது
தே.ஜ.கூ ஆரம்பிக்கப்பட்ட போது ஜார்ஜ் ஃபெர்ணாண்டஸ் மற்றும் எல்.கே.அத்வானி ஆகியோர் கூட்டணிக் கட்சிகளுடன் கலந்தாலோசித்துத்தான் முடிவெடுப்பார்கள். இப்போது யார் தே.ஜ.கூ-வின் தலைவர்.
பாஜக-வை எல்லோரும் வெறுத்து ஒதுக்கியபோது தே.ஜ.கூ-வில் நாங்கள் இருந்தோம். ஆனால், பால் தாக்கரேவின் இறந்தநாளன்று சிவசேனாவை தே.ஜ.கூ-விலிருந்து தூக்கியெறிந்துள்ளது பாஜக,” என்று சாம்னா-வின் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் இருக்கும் 288 இடங்களில், பாஜக 105 தொகுதிகளைக் கைப்பற்றியது. சிவசேனா, 56 இடங்களைப் பிடித்தது. சேனாவைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ், 54 தொகுதிகளில் வென்றுள்ளது. காங்கிரஸ் 44 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
தேர்தலுக்கு முன்பு பாஜக கூட்டணியில் இருந்த சிவசேனா, முதல்வர் பதவியில் பங்கு உட்பட பல்வேறு கோரிக்கைகளை பாஜக-வுக்கு வைத்தது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட அதிகாரப் பகிர்வு கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்து செயல்படத் தொடங்கியுள்ளனர்.
சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி இறுதியாகும் நிலையில் இருக்கின்றது. இன்னும் ஒரு சில நாட்களில் அது குறித்தான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.