Chennai Rain Update - "மத்திய மற்றும் வட சென்னையில் சுமாரான மழைதான் பெய்துள்ளது"
Chennai Rain Update - தமிழக அளவில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து நல்ல மழைப் பொழிவைக் கொடுத்து வருகிறது. இருப்பினும் சென்னையில் நேற்று இரவிலிருந்து மழை இல்லை. நேற்றும் இன்றும் சென்னையில் மிகக் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையிலும், எதிர்பாராத விதமாக சென்னைக்கு மழை திடீரென்று நின்றுவிட்டது. இந்நிலையில் மீண்டும் சென்னையில் எப்போது பரவலான மழையை எதிர்பார்க்கலாம் என்பது குறித்து பிரபல வானிலை கணிப்பாளர், தமிழ்நாடு வெதர்மேன், பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார்.
“வழக்கம் போல, இந்த ஆண்டும் தென் சென்னையில் மழை கொட்டித் தீர்த்துள்ளது. மத்திய மற்றும் வட சென்னையில் சுமாரான மழைதான் பெய்துள்ளது. தற்போது பெய்யும் மழையானது, மிகவும் அதிக பொழிவைக் கொண்டு வரும், அதே நேரத்தில் குறுகிய நேரத்தில் நின்றுவிடும். அடுத்ததாக டிசம்பர் 7 ஆம் தேதி பரவலான மழையை எதிர்பார்க்கலாம்.
ராமநாதபுரத்தில் வரலாறு காணாத மழை தொடர்ந்து வருகிறது. கூனூரிலும் கனமழை பெய்து வருகிறது,” என்று தனது முகநூல் பக்கம் மூலமாக தகவல் தெரிவித்துள்ளார் வெதர்மேன்.
தற்போது பெய்துள்ள மழையால், வெயில் காலத்தில் சென்னை நகருக்கு தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது என்று சொல்லும் வெதர்மேன், பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் அதிக கொள்ளளவை எட்டியுள்ளதாகக் கூறுகிறார்.