தமிழகத்தில் பொது போக்குவரத்து எப்போது தொடங்கப்படும்? முதல்வர் எடப்பாடி விளக்கம்!
தமிழகத்தில் பொது போக்குவரத்து எப்போது தொடங்கப்படும்? இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படுமா போன்ற கேள்விகளுக்கு முதல்வர் எடப்பாட பழனிசாமி பதிலளித்துள்ளார்.
தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்து இன்று ஆய்வு செய்தார். முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில், 275 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை அவர் தொடங்கி வைத்தார். மேலும் சில புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழசாமி கூறும்போது, நெல்லையை ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற ரூ.1000 கோடியில் திட்டம் பணிகள் நடைபெற்று வருகிறது. நெல்லையில் மிகப்பெரிய உணவு பூங்கா அமைக்கப்படுகிறது. தென் மாவட்டங்களில் புதிய தொழிற்சாலைகளை தொடங்க வேண்டும் என்பதே நோக்கம்.
நெல்லை மருத்துவக் கல்லூரியில் கூடுதல் எம்.பி.பி.எஸ் இடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கைக்காக 100 இடங்களை அதிகரிக்கப்பட்டுள்ளன என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், நெல்லை, தென்காசியில் கொரோனா சிகிச்சைக்கு தேவையான அனைத்து வசதிகளும் தயார் செய்யப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும்.
தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டிற்குள் வந்தவுடன் பொதுப் போக்குவரத்து தொடங்கப்படும். இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய தற்போது வாய்ப்பில்லை. இ-பாஸ் முறையை எளிமையாக்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம் என்றார்.
மேலும், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு தலா ரூ.5,000 வழங்கப்படும் என்றும் அவசர கால மருத்துவ பணியாளர்களுக்கும் தலா ரூ.5,000 நிவாரண உத்தரவு வழங்கப்படும் என்று கூறினார்.