This Article is From Feb 28, 2020

பெண்களுக்கான வெளியினை எப்போது இந்தச் சமூகம் உருவாக்கப்போகிறது

கடந்த காலத்தின் வளமை குறித்தும், மற்ற எல்லா நிகழ்வுகளையும் தொகுத்து வழங்கிய மூலப் பிரதியிலிருந்து, அதன் சாராம்சம் குறையாமல் மற்றொரு செவ்வியல் மொழிக்கு மொழிபெயர்ப்பது சற்று கடினமானதே.

பெண்களுக்கான வெளியினை எப்போது இந்தச் சமூகம் உருவாக்கப்போகிறது

பொதுவாக இலக்கிய உலகில் மொழி பெயர்ப்புகள் பெரிய அளவிலான கவனத்தினை பெறுவதில்லை. சர்வதேச மற்றும் சில குறிப்பிடத் தகுந்த எழுத்தாளர்களின் புத்தகங்கள் மட்டுமே மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு  கடைக்கோடி வாசிப்பாளனுக்கும் சென்று சேருகிறது. ஆனால், இந்த நிலைமை சமீப காலமாக மாறி வருவதாக பல்வேறு பதிப்பகங்கள் தெரிவிக்கின்றன. தமிழ் இலக்கிய சூழலில் பெரும்பான்மையான எழுத்தாளர்கள் இடத்தினை ஆண்களே ஆக்கிரமித்திருக்கக்கூடிய நிலையில் தற்போது அதனை கே.வி.ஜெயஸ்ரீ மாற்றியமைத்திருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள். 

இந்த ஆண்டுக்கான சிறந்த மொழி பெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதெமி விருது 'நிலம் பூத்து மரந்த நாள்' என்கிற நாவலை மலையாளத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்ததற்காக கே.வி. ஜெயஸ்ரீக்கு அறிவிக்கப்பட்டிருக்கின்றது. 20 ஆண்டுகளுக்கும் அதிகமான காலங்களாக மொழி பெயர்ப்பு துறையில் ஈடுபட்டு வரும் இவருக்கு, சாகித்திய அகாதெமி ஒரு புதிய அங்கீகாரத்தினை வழங்கியுள்ளது.

கிட்டதட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றை கொண்ட தமிழ்ச் சமூகம் குறித்து ஒரு மலையாளியான மனோஜ் குருர் மூல நாவலில்  எழுதியிருக்கிறார். மிகுந்த ஆவலோடு தான் மொழிபெயர்ப்பினை தொடங்கியபோது அது முற்றிலும் தமிழாகவே இருந்தது என்று மொழிப் பெயர்ப்பாளர் கே.வி.ஜெயஸ்ரீ இந்த மொழி பெயர்ப்பு குறித்து குறிப்பிட்டிருக்கிறார். ஒரு வரலாற்றை எழுதுவது என்பது அவ்வளவு எளிதான விடயமல்ல. 

கடந்த காலத்தின் வளமை குறித்தும், மற்ற எல்லா நிகழ்வுகளையும் தொகுத்து வழங்கிய மூலப் பிரதியிலிருந்து, அதன் சாராம்சம் குறையாமல் மற்றொரு செவ்வியல் மொழிக்கு மொழிபெயர்ப்பது சற்று கடினமானதே.
இளம் மஞ்சள் வெய்யில் நிறைந்த மாலை ஒன்றில் வாதுமை மரத்தின் கீழ் அமர்ந்து செய்யக்கூடிய வேலையல்ல மொழி பெயர்ப்பு. மாறாக அதற்கான சிரத்தைகள் சற்று அதிகமானவை.

சாகித்திய அகாதெமி விருது பெற்ற மொழிப்பெயர்ப்பாளர்களிலும் பெண் எழுத்தாளர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இனி வரும் சூழலில் பெண்களுக்கான எழுதும் வாய்ப்பினை ஆண்கள் உருவாக்கிட முன்வரா விட்டாலும், அப்படி அரிதாக எழுதும் பெண்களின் முயற்சியினை புறக்கணிக்கும் நிலைக்கு ஆண் சமூகம் செல்லாமல் இருப்பதே பெண்களுக்கான பேருதவியாக இருக்கும். தற்போதைய சமூகச் சூழல் என்பது ஆணாதிக்கம் நிறைந்ததாகவே இருக்கின்றதை மறுத்துக் கடந்து விட முடியாது.
குடும்பமும், அதற்கான பொறுப்புகள் அணைத்தும் பெண்களை மட்டுமே மையப்படுத்தி இருப்பதிலிருந்து பெண்கள் எப்போது விடுவிக்கப்படுகிறார்களோ அப்போதையிலிருந்து பெண்கள் பல துறைகளில் ஆண்களை விட மிகச் சிறப்பாகவே தடம் பதிப்பார்கள். ஆனால், தற்போதைய சமூகச் சூழலில் இந்த மாற்றம் அவ்வளவு எளிதானதல்ல.

இந்த சாகித்திய அகாதெமி விருது தமிழ்ச் சமூகத்தில் எழுதக்கூடிய மேலும் பல பெண்களுக்கு உத்வேகமாக அமையும்.

                                                                                             
                                                                                                                      - கார்த்தி.ரா

.