வரும் நவம்பர் 14 ஆம் தேதி முதல், ஆந்திர அரசு பள்ளிகளை சீரமைக்கும் நோக்கில் ‘நேடு - நாடு’ என்கிற திட்டத்தை அரசு ஆரம்பிக்க உள்ளது.
Vijayawada: ஆந்திர பிரதேசத்தில் (Andhra Pradesh) இருக்கும் அனைத்து அரசுப் பள்ளிகளிலும், ஆங்கில வழிக் கல்வியை கட்டாயமாக்க அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி (Jagan Mohan Reddy) நடவடிக்கை எடுத்தார். இந்நடவடிக்கைக்கு ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு (Chandrababu naidu) மற்றும் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்கள். அதற்கு ஜெகன், அதிரடியாக பதிலடி கொடுத்துள்ளார்.
“சந்திரபாபு நாயுடு சார், உங்கள் மகன் எந்தப் பள்ளியில் கல்வி பயின்றார். உங்கள் பேரக் குழந்தை நாளை எந்தப் பள்ளியில் பயிலும். வெங்கையா நாயுடு, உங்கள் மகன் மற்றும் பேரக் குழந்தைகள் எந்தப் பள்ளியில் படித்தார்கள்,” எனக் கேள்வி எழுப்பியுள்ளார் ஜெகன்.
அதேபோல ஜன சேனா கட்சியின் தலைவரும், நடிகருமான பவன் கல்யானுக்கு ஜெகன், “பவன் கல்யாண் சார், உங்களுக்கு 3 மனைவிகள் இருக்கிறார்கள். 4, 5 குழந்தைகள் இருக்கிறார்கள். அனைவரும் எந்த பள்ளிகளில் படிக்கிறார்கள்,” என்றார்.
மேலும் அவர், தனது அரசின் முடிவு குறித்து, “இந்த உலகில் போட்டியிட வேண்டும் என்றால், ஆங்கிலம் கட்டாயமாகும். அதனால்தான் நம் குழந்தைகள் ஆங்கில வழியில் கற்க வேண்டும் என்னும் நோக்கில் நடவடிக்கை எடுத்துள்ளேன்,” என்று விளக்கினார்.
முன்னதாக ஜெகன், வரும் 2020-21 கல்வியாண்டில் இருந்து, ஆந்திராவில் செயல்படும் அரசு பள்ளிகளில் முதலாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை, ஆங்கிலத்தில்தான் கல்வி கற்றுத் தரப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். அடுத்த 4 ஆண்டுகளில், 10 ஆம் வகுப்பு வரை ஆங்கிலம் மட்டுமே பயிற்றுவிக்கும் மொழியாக இருக்கும். அதே நேரத்தில் தெலுங்கு மற்றும் உருது ஆகிய மொழிகள், அனைத்துப் பள்ளிகளிலும் கட்டாயப் பாடமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆந்திர பிரதேசத்தின் கல்வியறிவு விகிதத்தை உயர்த்தும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜெகன் தெரிவிதுள்ளார். வரும் நவம்பர் 14 ஆம் தேதி முதல், ஆந்திர அரசு பள்ளிகளை சீரமைக்கும் நோக்கில் ‘நேடு - நாடு' என்கிற திட்டத்தை அரசு ஆரம்பிக்க உள்ளது.