This Article is From Mar 04, 2019

பாஜக தேசிய கட்சியாக இருந்தாலும், அதிமுக தலைமையிலேயே கூட்டணி! - தம்பிதுரை

பாஜக தேசிய கட்சியாக இருந்தாலும், தமிழகத்தில் அதிமுக தலைமையிலேயே கூட்டணி என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

பாஜக தேசிய கட்சியாக இருந்தாலும், அதிமுக தலைமையிலேயே கூட்டணி! - தம்பிதுரை

மக்களவைத் தேர்தல் பணிகளில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்துள்ளன. இந்தக் கூட்டணியில் பாஜகவுக்கு மிகக்குறைவாக 5 இடங்கள் மட்டுமே ஒதுக்கிய அதிமுக, பாமகவுக்கு அதைக்காட்டிலும் அதிகமாக ஒதுக்கியது. இதனால், தமிழகத்தில் அதிமுக தலைமையில் கூட்டணி அமைந்துள்ளதாகப் பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில், அண்மையில் தமிழகம் வந்த பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, தமிழகத்தில் அதிமுக தலைமையில் கூட்டணி ஏதும் இல்லை. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் அதிமுக இடம் பெற்றுள்ளது என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் அமித் ஷா கூறும் வீடியோ வைரலாக பரவியது.

இந்நிலையில் அதிமுக பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை,

பாஜக தேசிய கட்சியாக இருந்தாலும் தமிழகத்தில் அதிமுக தலைமையிலேயே கூட்டணி அமைந்துள்ளது. இந்த கூட்டணியில் எந்த கட்சிகள் இடம்பெற வேண்டும், யாருக்கு எத்தனை தொகுதிகள் வழங்குவது என்பதை அதிமுகவே முடிவு செய்யும்.

அதிமுகவை மீறி, தேசிய கட்சிகள் தமிழகத்தில் வெற்றி பெற முடியாது. தேசிய கட்சியான காங்கிரஸ் இன்றைக்கு மாநிலக் கட்சியாக மாறிக் கொண்டிருக்கிறது. அதே போல் பாஜகவும் சில மாநிலங்களில் வெற்றி பெற முடியாத நிலையில் உள்ளது.

காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகள் குடும்ப அரசியல் நடத்துகின்றன. பாஜக அதிமுகவின் கொள்கைகள் வெவ்வேறானவை. தமிழகத்தை பொறுத்தவரை குறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையிலேயே அதிமுக பாஜக கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழர்களின் உரிமை மற்றும் கலாசாரத்தை பாதுகாக்க அதிமுக எப்போதும் துணை நிற்கும். அதே போல் மாநில சுயாட்சி கொள்கையையும் எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று அவர் கூறியுள்ளார்.

.