அரசின் முடிவுக்கு எதிராக சிபிஐ இயக்குநர் அலோக் வெர்மா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்
New Delhi: கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட சிபிஐ இயக்குநர், அலோக் வெர்மாவுக்கு மீண்டும் பதவி அளிக்கப்படுமா என்பது குறித்து உச்ச நீதிமன்றம் இன்று முடிவெடுக்க உள்ளது.
இந்நிலையில் அலோக் வெர்மாவுக்காக உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன், ‘அடிப்படை காரணமே இல்லாமல் அலோக் வெர்மா, தனது பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். சிபிஐ இயக்குநரை நீக்க வேண்டுமென்றால், ஒரு கமிட்டி அமைத்து, அவர்கள் கொடுக்கும் வழிகாட்டுதல்படியே நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அரசு அப்படிப்பட்ட எந்த நடைமுறையையும் பின்பற்றவில்லை' என்று வாதாடினார்.
அதற்கு உச்ச நீதிமன்ற அமர்விலிருந்து நீதிபதியான ஜோசப், ‘சிபிஐ இயக்குநர், லஞ்சம் வாங்கியது பட்டவர்த்தனமாக தெரிந்திருந்தால் என்ன செய்வது' என்று கேள்வி எழுப்பினார். அதற்கு நாரிமன், ‘அப்படியென்றால், அரசு அதை நிரூபிக்க ஆதாரங்களை சமர்பித்திருக்க வேண்டும்' என்று பதிலளித்தார்.
ஐதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சதீஷ் சனா குறித்து ஒரு வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது. இதிலிருந்து தன் பெயரை நீக்க சனா, சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கு லஞ்சம் கொடுத்ததாக புகார் சுமத்தப்பட்டது. அஸ்தானா மீதான புகார் குறித்து, எப்ஐஆர் பதிவு செய்ய அலோக் வெர்மா உத்தரவிட்டார்.
இது ஒரு புறமிருக்க, சதீஷ் சனாவிடம் சிபிஐ இயக்குநர் அலோக் வெர்மா லஞ்சம் வாங்கியிருக்கிறார் என்று மத்திய விசாரணை ஆணையத்திடம் சில மாதங்களுக்கு முன்னர் எழுத்துப் பூர்வமாக புகார் அளித்தார் அஸ்தானா. இதனால் சிபிஐ அமைப்புக்குள் பனிப் போர் மூண்டது. இதையடுத்து பிரதமர் அலுவலகம் இந்த விவகாரத்தில் தலையிட்டு, வெர்மா, அஸ்தானா மற்றும் பல அதிகாரிகளுக்கு கட்டாய விடுப்பு அளித்து அனுப்பியது.
இந்நிலையில், அரசின் முடிவுக்கு எதிராக சிபிஐ இயக்குநர் அலோக் வெர்மா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் விசாரணையின் போது தான் நாரிமன், அலோக் வெர்மாவுக்கு ஆதரவாக வாதாடினார்.