Sabarimala Temple: இந்த வழக்கு விவகாரத்தில் பெண்களுக்கான அடிப்படை உரிமை பாதிக்கப்படுவதாக கூறி, உச்ச நீதிமன்றம் சென்ற ஆண்டு அக்டோபரில் இந்த வழக்கை நாடாளுமன்ற பெஞ்சுக்கு மாற்றியது
ஹைலைட்ஸ்
- 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழக்கை விசாரித்து வருகிறது
- ஐயப்பன் கோயிலை தேவஸ்வம் போர்டு 800 ஆண்டுகளுக்கு மேல் நிர்வகித்து வருகிறது
- பெண்கள் தடைக்கு என்னக் காரணம், உச்ச நீதிமன்றம் கேள்வி
New Delhi: 10 முதல் 50 வயதுகுட்ப்பட்ட பெண்கள், சபரிமலையில் (Sabarimala Temple) இருக்கும் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்களா என்பது குறித்து இன்று முடிவெடுக்க உள்ளது உச்ச நீதிமன்றம். கோயிலில் உள்ள ஐயப்ப சாமி, பிரமச்சாரி என்பதால் இந்த வயது பெண்கள் வரக் கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது.
இது குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்:
1.தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் சந்திராசூட், குவாலிகர், இந்திரா மல்கோத்ரா, மற்றும் நாரிமன் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.
2.இந்த வழக்கு குறித்தான விசாரணையில் சபரிமலையை (Sabarimala Temple) நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் தேவாஸ்வம் போர்டு, ‘பெண்களை ஒதுக்கி வைக்கும் நோக்கில், அவர்களின் வருகைக்குத் தடை விதிக்கப்படவில்லை. இந்த நடைமுறையை அவர்களே முன்வந்து ஏற்றுக் கொண்டனர்’ என்று வாதிட்டது. அதற்கு உச்ச நீதிமன்றம், ‘மதக் கொள்கைகள் சட்ட சாசனத்துக்கு உட்பட்டதாக இருத்தல் வேண்டும்’ என்று கூறியது.
3.போர்டு மேலும், ‘இந்த விவகாரம் மத உணர்வு சம்பந்தப்பட்டது. எனவே சரியான முடிவை சீக்கிரமே எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்தது.
4.’எங்கள் நம்பிக்கை மூடத்தனமானது என்று பலர் சொல்லலாம். ஆனால் அதை யார் முடிவு செய்வது?’ என்று வாதங்களின் போது கேள்வி எழுப்பியது போர்டு.
5.மேற்குறிப்பிட்டுள்ள வாதத்துக்கு உச்ச நீதிமன்றம், ‘ஒரு குறிப்பிட்ட வயதைச் சேர்ந்த பெண்கள் மட்டும் கோயிலுக்குள் வருவது தடுக்கப்படுவது, இந்து மதத்தின் அடிப்படையா?’ என்று கேள்வி எழுப்பியது.
6.மேலும் உச்ச நீதிமன்றம், ‘ஒரு பெண் பூப்பெய்வது 10 வயதுக்கு முன்னரும் நடக்கலாம். அதேபோல மாதவிடாய் நிறுத்தம் 50 வயதுக்கு முன்னரும் ஏற்படலாம். எனவே, ஏன் 10 முதல் 50 வயது என்ற வரைமுறை கடைபிடிக்கப்படுகிறது’ என்று தேவஸ்வம் போர்டை வினவியுள்ளது.
7.’சபரிமலைக்கு (Sabarimala Temple) வருவதற்கு முன்னர் 41 நாட்கள் விரதம் இருக்க வேண்டும். இள வயதுப் பெண்களால் இந்த விரதத்தை கடைபிடிக்க முடியாது’ என்று தேவஸ்வம் போர்டு சொல்ல, உச்ச நீதிமன்றம் அந்தக் கருத்தை ஏற்கவில்லை.
8.இந்தியன் யங் லாயர்ஸ் அசோசியேஷன் என்ற அமைப்பால் தான், இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
9.கேரள அரசு இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை மாறி மாறி நிலைப்பாடு எடுத்துள்ளது. ஆனால் கடந்த ஜூலை மாதம், பெண்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதி அளிக்கலாம் என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.
10.இந்த வழக்கு விவகாரத்தில் பெண்களுக்கான அடிப்படை உரிமை பாதிக்கப்படுவதாக கூறி, உச்ச நீதிமன்றம் சென்ற ஆண்டு அக்டோபரில் இந்த வழக்கை நாடாளுமன்ற பெஞ்சுக்கு மாற்றியது.