தமிழகத்தில் உள்ள மாவட்டங்களை மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தியுள்ளது மாநில அரசு.
ஹைலைட்ஸ்
- தமிழகத்தில் இதுவரை 1,242 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
- நேற்று மட்டும் 38 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது
- நேற்று இருவர் கொரோனா காரணமாக உயிரிழந்தனர்
கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்திய முழுவதற்கும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியிட்டார்.
அவரின் அறிவிப்பில், ஏப்ரல் 20 ஆம் தேதிக்குப் பிறகு கொரோனா தொற்று குறைவாக உள்ள பகுதிகளில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று தெரிவித்திருந்தார். அதன்படி, கொரோனா தாக்கம் அதிகம் இல்லாத இடங்களில் எந்தெந்த விஷயங்களுக்கு அனுமதி கொடுக்கப்படும், மற்றும் எவற்றுக்கெல்லாம் அனுமதி கொடுக்கப்படாது என்கின்ற நெறிமுறைகளை மத்திய அரசு நேற்று வெளியிட்டது.
அதன்படி, சமூக இடைவெளி உள்ளிட்ட நிபந்தனைகளைப் பின்பற்றி மக்கள் நெருக்கம் குறைவான தொலைதூரப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள், சிறப்பு பொருளாதார மண்டலங்களில் செயல்படும் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், கொரோனா வைரஸ் ஹாட்ஸ்பாட்டுகள் இல்லாத பகுதிகளில் வேளாண்மை நடவடிக்கைகள், மண்டிகள் மூலம் வேளாண் பொருட்கள் கொள்முதல் மற்றும் சந்தை படுத்தல் உள்ளிட்ட வேளாண் தொடர்புடைய அனைத்து பணிகளையும் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பால், பால் சார்ந்த பொருட்கள், கோழி, மீன், இறைச்சி சார்ந்த பொருட்களைச் சந்தைக்குக் கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், தேயிலை, காபி மற்றும் ரப்பர் தோட்டங்களில் பணிகளை மீண்டும் தொடங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்கள், மாவட்டங்களுக்கு இடையேயான மக்கள் போக்குரவத்துக்கு தடை தொடரும் என்றும், எனினும் அத்தியாவசிய, அத்தியாவசியமற்ற பொருட்களை ஏற்றிச்செல்லும் சரக்கு வாகனங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட உள்ளது. இதேபோல், நெடுஞ்சாலை உணவகங்கள், வாகன பழுது பார்க்கும் கடைகள், அரசு பணிகளை மேற்கொள்ளும் கால்சென்டர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, விமானம், ரயில், சாலை போக்குவரத்துகள் ஒட்டு மொத்தமாக நிறுத்தப்படும். அனைத்து கல்வி நிலையங்கள், பொதுப் போக்குவரத்து சேவைகள் இயங்க தடை நீடிக்கிறது. இதேபோல், வணிக வளாகங்கள், திரையரங்குகளை திறக்க தடை நீடிக்கிறது. மதக் கூட்டங்கள், அரசியல் கூட்டங்கள், உள்ளிட்ட எந்தவொரு பொதுக்கூட்டங்களுக்கும் அனுமதி கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களை மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தியுள்ளது மாநில அரசு. அதன்படி, 17 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகம் இருப்பதாகக் கூறி சிவப்பு மண்டலமாக வகைப்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று சற்று குறைவாக உள்ள 10 மாவட்டங்களை ஆரஞ்சு நிறத்திலும், கொரோனா தொற்று மிகவும் குறைவாக உள்ள 7 மாவட்டங்களை மஞ்சள் நிறம் கொண்டும் பிரித்துள்ளது.
அதே நேரத்தில் மத்திய அரசு, தமிழகத்தில் உள்ள 22 மாவட்டங்களை கொரோனா ஹாட்ஸ்பாட்ஸ் என்று அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருச்சி, கோவை, நெல்லை, ஈரோடு, வேலூர், திண்டுகல், விழுப்புரம், திருப்பூர், தேனி, நாமக்கல், செங்கல்பட்டு, மதுரை, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி, கடலூர், திருவள்ளூர், சேலம், திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களை ஹாட்ஸ்பாட்ஸ் என்று பிரித்துள்ளது மத்திய அரசு.
மேலும் தஞ்சாவூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சிவகங்கை, நீலகிரி, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களை ‘நான்-ஹாட்ஸ்பாட்ஸ்' என்று பிரித்துள்ளது மத்திய அரசு.
ஒரு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 4 நாட்களுக்குள், இரண்டு மடங்காக அதிகரித்தால் அவற்றை கொரோனா ஹாட்ஸ்பாட்ஸ் என்று பிரிக்கிறது மத்திய அரசு.
அதே நேரத்தில், தமிழக அரசு, எத்தனை கொரோனா நோயாளிகள் இருக்கிறார்களோ அதன் அடிப்படையில் பிரிவுகளை வகுத்துள்ளதாக தெரிகிறது.